பாராளுமன்றத் தேர்தலில்
பா.ஜனதாவை வீழ்த்த வியூகம்
20 கட்சித் தலைவர்கள் நாளை பீகாரில் ஆலோசனை
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நாளை (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாட்னாவுக்கு வரும் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஆகியோர் இன்று இரவுக்குள் பாட்னா சென்று சேர உள்ளனர். அவர்கள் தங்குவதற்கு பாட்னாவில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் நாளை காலை பாட்னா செல்ல உள்ளனர். பெரும்பாலான தலைவர்கள் நாளை மதியத்துக்குள் பாட்னா சென்று சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 17 அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இது தவிர நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை பிற்பகல் பாட்னாவில் உள்ள முக்கிய அரங்கில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட உள்ளன. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் மாநில கட்சிகள் தொகுதிகளை விட்டுக் கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் பா.ஜனதாவுக்கு எதிராக 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. இவை தவிர எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து பொதுவான தேர்தல் திட்டங்கள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவை எதிர்த்து முதல் முறையாக நாளை கூடுகின்றன. இந்த கூட்டத்தில் பொதுத் திட்டம் கொண்டுவர இயலுமா என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து உருவாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாநில கட்சிகள் செல்வாக்குள்ள தங்களது தொகுதிகளை விட்டுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளில் பல வலுவான தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே எதிர்க்கட்சிகள் திட்டம் நாளைய கூட்டத்துக்கு பிறகுதான் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.