10 மாவட்டங்களில் மழை நீடிக்கும்
வானிலை மையம் அறிவிப்பு



தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வாட்டி வதைத்து வந்த கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை குளிர வைத்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பகலில் மட்டுமின்றி இரவிலும் இடி-மின்னலுடன் மழை கொட்டியது. சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் லேசாகவும் சில நேரங்களில் கன மழையாகவும் பெய்தது. சென்னையை ஒட்டிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் 2 நாட்களுக்கு பிறகு இன்று வெயில் தலை தூக்கியது. நள்ளிரவு வரை மழை பெய்தாலும் கூட காலையில் இருந்து சூரிய வெளிச்சம் தெரிந்தது.

இதற்கிடையே வங்கக் கடலில் தென்கிழக்கு கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையை தவிர 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான இடி-மின்னலுன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.