சிகிச்சை பெறும் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இன்று மீண்டும் விசாரணை




அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தார். அடுத்த வாரம் 23-ந் தேதி மாலை 3 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய போலீஸ் படையினர் காவேரி மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை நேற்று மாலையில் இருந்தே ஏற்றுக்கொண்டனர். மருத்துவமனை நுழைவுவாயில் மற்றும் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியின் 7-வது மாடி ஆகியவை மத்திய பாதுகாப்பு படையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதைதொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கார்த்திக் தாசரி இன்று செந்தில் பாலாஜியிடம் விசாரணையை தொடங்குகிறார். கடந்த 13-ந்தேதி 18 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தி செந்தில்பாலாஜியிடம் இருந்து பல்வேறு தகவல்களை திரட்டிய அமலாக்கத்துறை குழுவினர் இன்று போக்குவரத்து கழக வேலை மோசடி மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்க திட்டமிட்டிருந்தனர். இதன்படி அமலாக்கத்துறை துணை இயக்குனரான கார்த்திக் தாசரி நடத்த உள்ள இந்த விசாரணையின்போது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக செந்தில்பாலாஜி அளிக்கும் தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்படுகிறது. இதற்கிடையே தலைமை செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அறையில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள்.

அந்த ஆவணங்களில் என்ன உள்ளது என்பதை அமலாக்கத்துறையினர் இதுவரை தெரிவிக்கவில்லை. அது தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே அனுராதா ரமேஷ் என்கிற பெண் தொழில் அதிபருக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் செந்தில்பாலாஜியின் உறவினர் ஒருவரது பெயரில் ரூ.10.9 லட்சத்துக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களையும் அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அது தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.