30 நிமிடத்தில் முடிந்த முன்பதிவு- வந்தே பாரத் ரெயிலில் பயணிக்க பயணிகள் ஆர்வம்



சென்னை: சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்க உள்ளார். இதைத்தொடர்ந்து, 9-ந்தேதி முதல் பயணிகள் ரெயில் சேவை நடைமுறைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு, நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. இணையதளம் மற்றும் செல்போன் ஆப் மூலமாக பயணிகள் விறுவிறுப்பாக முன்பதிவு செய்தனர். அதன்படி, முன்பதிவு தொடங்கிய 30 முதல் 40 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல, சென்னையில் இருந்து 5 மணி 50 நிமிடங்களில் கோவைக்கு செல்ல முடியும். இதில், குளிர்சாதன முதல்நிலை இருக்கை டிக்கெட் கட்டணம் ரூ.2,310 ஆகவும், 2-ம் நிலை இருக்கை கட்டணம் ரூ.1,215 ஆக வசூலிக்கப்பட்டு உள்ளது. உணவின்றி டிக்கெட் கட்டணம் முதல்நிலை இருக்கைக்கு ரூ.2,116 ஆகவும், 2-ம் நிலை இருக்கைக்கு ரூ.1,057 ஆகவும் வசூலிக்கப்பட்டது. இதேபோல, குளிரூட்டப்பட்ட இந்த ரெயிலில் 450 இரண்டாம் நிலை இருக்கைகளும், 56 முதல்நிலை இருக்கைகளும் உள்ளது. மொத்தம் 8 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.