தமிழகத்திலும் பா.ஜனதா கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்- அண்ணாமலை




சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமையகமான கமலாலயத்தில் பா.ஜனதா 44 -ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பா.ஜ.க. கொடியை ஏற்றினார். தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு தமிழ் நாட்காட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டது. தேச தலைவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் உருவப்படங்கள் பொறித்த நாட்காட்டிகளையும் வெளியிட்டார்.

பா.ஜ.க. கட்சி தற்போது 44-வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுகிறது. இது சாதாரணமான ஒன்று இல்லை இது ஒரு வரலாறு. திரும்பி பார்க்கும் பொழுது தொண்டர்களாக இருக்கக்கூடிய எங்களுக்கு பிரமிப்பாக இருக்கிறது. கட்சியை துவங்கும்போது இரண்டு எம்.பி.க்கள் பதவி மட்டுமே கிடைத்தது. அப்போது பா.ஜ.க.வை பாராளுமன்றத்தில் கேலியும் கிண்டலும் செய்தார்கள். பா.ஜனதா 43 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து உள்ளது. தி.மு.க. தொடங்கிய பிறகு தான் பா.ஜ.க. தொடங்கப்பட்டது. குறுகிய காலத்தில் பா.ஜ.க., தி.மு.க.வை விட அதிக அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. பாரத பிரதமர் பா.ஜ.க.வின் இத்தகைய வளர்ச்சிக்கு தொண்டர்களின் உழைப்பு மட்டுமே காரணம் என்று கூறினார். அது முற்றிலும் உண்மை தான்.

தமிழகத்தில் பா.ஜ.க. கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் தொண்டர்களின் உழைப்புகள் அதிகமாக இருக்கிறது. பா.ஜ.க.வை பொருத்தவரை 365 நாட்களும் பா.ஜ.க.வின் உறுப்பினர் சேர்க்கும் நாள் தான். அரசியலை பொறுத்தவரை சித்தாந்தமாக செயல்பட வேண்டும். எனவே பா.ஜ.க. சித்தாந்தத்தில் இருக்கும் உறுப்பினர்கள் வருடம் 365 நாளும் பா.ஜ.க.வில் இணைந்து கொள்ளலாம். மேலும் பா.ஜ.க.வில் உறுப்பினர்கள் சிறப்பு முகாம்களும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. டெல்டா பகுதிகளை பொருத்தவரை தமிழகத்திற்கு தேவையான அரிசி கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தற்போது மத்திய அரசு அதனை ஒப்பந்தமாக வெளியிட்டு உள்ளது. இந்த தகவல் வந்தவுடனே அதை நாங்கள் மதிய அரசு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு இங்கு கொண்டு வராது. டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த ஆட்சியின்போது அறிவித்தார்கள். கண்டிப்பாக விவசாயம் செய்யும் நிலங்கள் மற்றும் பாதுகாக்கும் மண்டலங்களில் சுரங்கங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படாது. மேலும் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நல்ல செய்தி தேடி வரும். பா.ஜ.க.வை பொருத்தவரை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக சொல்ல முடியாது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பிறகு 4 மடங்காக பா.ஜனதா உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.