அ.தி.மு.க.வுடன் கூட்டணி பற்றி பா.ஜ.க. தேசிய தலைமையே முடிவு செய்யும்
எடப்பாடி பழனிசாமி




சேலம்: அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக தனது சொந்த ஊரான சேலத்துக்கு வந்தார். வரும் வழியில் சென்னையில் இருந்து சேலம் வரை வழி நெடுக அவருக்கு அ.தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மாவட்டம் தலைவசலில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பிலும், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் திருவாகவுண்டனூரிலும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு சேலம் நெடுஞ்சலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் அவரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கியும், மலர் மாலை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

பாரதிய ஜனதா என்பது தேசிய கட்சி. அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை அந்த கட்சியின் தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. தொடர்வதாக டெல்லியில் உள்ள தலைவர்களே கூறிவிட்டனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய ஒரு சிலரை தவிர மற்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணையவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதன் அடிப்படையில் அழைப்பு விடுத்துள்ளோம். அ.தி.மு.க.வில் பல்வேறு கட்சியினர் இணைந்து வருகிறார்கள். ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சியில் இணைவது என்பது அவரவர் ஜனநாயக உரிமை. எம்.ஜி.ஆர். கட்சியை தொடங்கும்போது பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவும் பல சோதனைகளை சந்தித்தார். பொதுவாக தலைவர்களாக இருப்பவர்கள் சோதனைகளை சந்தித்தாலும் இறுதியில் நிச்சயம் வெற்றிபெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.