மாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்



மாமல்லபுரம்: உலகின் பாரம்பரிய நினைவு சின்னங்களை பாதுகாத்து அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, யுனெஸ்கோ அமைப்பினர் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ந் தேதியை உலக பாரம்பரிய தினமான கடைபிடித்து வருகிறார்கள். மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கோட்டை மியூசியம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள், செஞ்சிகோட்டை, தஞ்சாவூர், தாராசுரம் கோயில், வேலூர் கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளை, இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது. அதன்படி இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை, மற்றும் குடவரை கோயில் பகுதிகளை இலவசமாக பார்த்து ரசித்து சென்றனர். இதனால் வழக்கத்தை விட இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.