கட்டாய தமிழ் தேர்வில் 5 லட்சம் பேர் தோல்வி- டி.என்.பி.எஸ்.சி. ஆணைய அவசர கூட்டம்
நாளை கூடுகிறதுசென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்டு உள்ளிட்ட குரூப் 4 பதவிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வு நடத்தியது. இந்த தேர்வு முடிவை 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 24-ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. 18 லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் எழுதிய இந்த தேர்வு முடிவில் தென்காசியை சேர்ந்த ஒரே பயிற்சி மையத்தில் படித்த சுமார் 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்ற தகவல் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதேபோல் காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை, தேர்வர்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டன. இதை ஒப்பிட்டு பார்த்தபோதுதான், சில பயிற்சி மையங்களில் படித்து தேர்வு எழுதியவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. இந்த பிரச்சினை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் சட்டசபையில் கேள்வி எழுப்பியபோது நிதியமைச்சர் பழனிவேல் விரிவான விளக்கம் அளித்தது மட்டுமின்றி விரிவான அறிக்கை அளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தலைமையில் ஆணைய கூட்டம் நாளை கூடுகிறது. இதில் குரூப்-4 தேர்வில் எந்தெந்த தேர்வு மையங்களில் எவ்வளவு பேர் தேர்வு எழுதினார்கள் என்ற பட்டியலை வைத்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் குரூப்-4 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என கூறி ஏராளமான தேர்வர்கள் பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் கூறுகையில், எங்களுக்கு எந்தவித அடிப்படை காரணங்களும் இல்லாமல் தேர்வு முடிவு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் ஓ.எம்.ஆர்.ஷீட் மதிப்பீடு செய்ய தகுதியற்றது என ஆன்லைனில் காட்டுவதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து தேர்வாணையத்தில் விசாரித்தபோது, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விதிப்படி கட்டாய தமிழ் தேர்வில் 40 மதிப்பெண் பெறாத தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்பதால் அந்த வகையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தோல்வி அடைந்திருந்ததால் அவர்களது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று காரணம் கூறினார்கள். இதனால் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு ஏராளமான தேர்வர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அரசு தரப்பிலும், விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதால் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு தவறு நடந்துள்ளது என்பது தெரியவரும். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் ராமநாதபுரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடத்தை பிடித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் வெளியான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவின்போதும் பல்வேறு முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக 13 பேர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கேள்வித்தாள்கள் லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. எனவே இப்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு வெளியான போதும் ஒரே பயிற்சி மையத்தில் படித்த ஏராளமானோர் வெற்றி பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்களின் சந்தேகத்திற்கான விரிவான விளக்கத்தை டி.என்.பி.எஸ்.சி. இன்று அல்லது நாளை வெளியிடும் என தெரிகிறது. அப்போது பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.