சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம்- மாநகராட்சி அனுமதி
சென்னை: நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. சென்னை மாநகராட்சியில் 'டோரன்ட் கியாஸ்' நிறுவனம் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. சென்னை மாநகராட்சியில் இதை செயல்படுத்த ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டு வந்தன. சென்னையில் உள்ள சாலைகள், சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றிடம் இருப்பதால் இந்த திட்டத்துக்கான நிலையான வழி காட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கியாஸ் குழாய் புதை வடம், மற்ற நிறுவனங்களின் கேபிள்களுக்கும், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் ஆகியவற்றுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும். கல்வெட்டுகள், பாலங்கள், போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட வழி காட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- சென்னையில் தார் சாலைகள் புதை வடத்தில் கியாஸ் குழாய் இணைப்பு அமைக்க 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.20 லட்சம் வைப்புத் தொகையும், கான்கிரீட் சாலைக்கு ரூ.21.75 லட்சம் வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும். சாலை வெட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள். சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் குறித்து தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது. இதை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.