சென்னையில் பொங்கல் சிறப்பு பஸ்கள்
நாளை முதல் இயக்கம்சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பொங்கல் பண்டிகையை யொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் செல்லும் வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் நிரம்பிவிட்டன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வருகிற 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல் 18-ந்தேதி மற்றும் 19-ந் தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் 2100 அரசு விரைவு பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- பொங்கல் பண்டிகையை யொட்டி கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம், பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஆந்திரா, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கே.கே.நகர் மாநகர பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் செல்கின்றன. தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலை வழியாக திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.