பா.ஜனதா மாவட்ட தலைவர்களுடன் அண்ணாமலை நாளை ஆலோசனைசென்னை: பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி இப்போதே தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த மாநில தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் கைகோர்த்து வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. டெல்லியில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, மாநில நிர்வாகியான கேசவ விநாயகம், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிலையில் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். தி.நகரில் உள்ள பா.ஜனதா மாநில தலைமையகமான கமலாலயத்தில் (8-ந்தேதி) இந்த கூட்டம் தொடங்குகிறது. மாலை வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு ஆலோசனை நடத்துகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவிலான வெற்றியை பெற வேண்டும் என்று கணக்கு போட்டு வைத்துள்ளது. இது தொடர்பான வியூகத்தை வகுப்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பங்கேற்பதற்காக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ளனர்.