கவர்னர் ஆர்.என்.ரவியுடன்
சபாநாயகர் அப்பாவு சந்திப்பு




சென்னை: ஆண்டு தோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் 2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 9-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரை நிகழ்த்துவார். அதில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், சாதனைகள், முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெறும். சட்டசபை கூடும் தேதியை சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கவர்னர் ஆர்.என்.ரவி 9-ந்தேதி சட்டசபையில் உரையாற்ற இருப்பதையொட்டி சம்பிரதாயப்படி அவரை சபாநாயகர் நேரில் அழைப்பு விடுக்க வேண்டும்.

அந்த மரபுபடி சபாநாயகர் அப்பாவு கிண்டி மாளிகைக்கு சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது சட்டசபையில் உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது சட்டசபை செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார். 9-ந்தேதி சட்டசபையில் கவர்னர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும் அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தமிழில் அந்த உரையை வாசிப்பார். இந்த உரை முழுமையாக தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகும். அத்துடன் அன்றைய கூட்டம் முடிவடையும். அதன் பிறகு அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யும்.

அநேகமாக 11-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்ததும் பட்ஜெட் தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் மீண்டும் சட்டசபை கூடும். சட்டசபை கூட்டத்தொடரில் ஆளும் கட்சி மீது எதிர்க்கட்சியினர் சரமாரி புகார் தெரிவிக்கவும், விமர்சனங்களை முன் வைக்கவும் பல்வேறு விஷயங்களை பட்டியல் எடுத்து வைத்துள்ளனர். இவற்றுக்கு பதிலடி கொடுக்க ஆளும் கட்சி அமைச்சர்களும் தயார் நிலையில் பல்வேறு குறிப்புகளை தயார் செய்து வருகின்றனர். இதனால் சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.