சென்னையில் வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடுவது 60 சதவீதம் குறைந்தது- போக்குவரத்து போலீசார் தகவல்



சென்னை: நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய அபராத நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.1000மும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது போன்று பல்வேறு விதிமீறல்களுக்கும் நூற்றுக்கணக்கில் இருந்த அபராத தொகை ஆயிரங்களை தாண்டி உள்ளது. சென்னையிலும் புதிய அபராத வசூலில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 2 மாதங்களில் ரூ 17 கோடியே 47 லட்சம் ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 94 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. புதிய அபராத தொகை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு சென்னையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 2 லட்சத்து 27 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆனால் புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு இந்த வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு மாதத்தில் பதிவாகும் வழக்குகள் ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளன. 97 ஆயிரம் வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசார் விதிமீறலில் ஈடுபடுபவர்களை பிடித்து கடுமையாக அபராத தொகையை வசூலிப்பதால் போக்குவரத்து விதிமீறல்கள் வெகுவாக குறைந்துள்ளன. அந்த வகையில் 60 சதவீதம் அளவுக்கு போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்திருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.