அரசு விரைவு பஸ்களுக்கு
பொங்கல் முன்பதிவு தொடங்கியது
சென்னை: ஜனவரி 15 பொங்கல் பண்டிகையும், 16-ந்தேதி மாட்டுப்பொங்கல், 17-ந்தேதி உழவர் திருநாளும் கொண்டாடப்பட உள்ளது. தை பொங்கலுக்கு முந்தைய நாள் 14-ந்தேதி போகி கொண்டாடப்படுகிறது. ஆதலால் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பே இதற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதால் அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. சிறப்பு ரெயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எல்லா வகுப்புகளிலும் நிரம்பி விட்டன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துவிடும் நிலையில் அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பஸ்களுக்கு 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் ஜனவரி 12-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள் இன்று முதல் அரசு விரைவு பஸ் களுக்கு முன்பதிவுக்கு திட்டமிடலாம்.
ஜனவரி 13-ந்தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை முன்பதிவு செய்ய வேண்டும். tnstc.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கடைசிநேர கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகை போல பொங்கலுக்கும் பெருமளவில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முந்தைய முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளது. குறைந்த அளவில் தான் முன்பதிவு செய்துள்ளனர். ஜனவரி முதல் வாரத்தில் இருந்து புக்கிங் விறுவிறுப்பாக இருக்கும். முன்பதிவுக்கு தேவையான பஸ்கள் படிப்படியாக அதிகரிக்கப்படும். முதலில் அரசு விரைவு பஸ்களுக்கும் பின்னர் போக்குவரத்து கழக பஸ்களுக்கும் முன்பதிவு செய்யப்படும் பொங்கல் சிறப்பு பஸ்கள் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். சென்னை உள்ளிட்ட முக்கிய 3 நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். தீபாவளியை போல பொங்களுக்கும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.