சீரற்ற நூல் விலையால்
சீரழியும் ஜவுளித்துறை!



ஈரோடு: நூல் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்து வருவதால் ஜவுளி துறையினர் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இழப்பை தவிர்க்க ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக நூல் விலை சீரற்ற முறையில் நீடித்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட 350 கிலோ எடை கொண்ட ஒரு கண்டி நூல் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது. பின் படிப்படியாக குறைந்து 53 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட ஒரு கண்டி நூல், அண்மையில் மீண்டும் அதிகரித்து 72,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்த சீரற்ற விலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்டர் எடுத்து துணிகளை உற்பத்தி செய்வதற்குள் நூலின் விலை கணிசமாக உயர்வதால் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். மேலும் நூல் விலை குறைவாக உள்ள கம்போடியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு ஏற்றுமதி செய்ய முடியாததால் 50 சதவீதம் அளவிற்கு உற்பத்தியும், 20 சதவீதம் அளவிற்கு ஏற்றுமதியும் பாதித்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போதிய அளவு பருத்தி உற்பத்தி இருந்தும் நூலுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் ஜவுளி துறையினர், பதுக்களும், ஏற்றுமதியுமே நூல் விலை உயர்வுக்கு காரணம் என குற்றம்சாட்டுகின்றனர். ஒன்றிய, மாநில அரசுகள் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 3 மாதங்களுக்கு ஒருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் ஜவுளித்துறையினர் வலியுறுத்துகின்றனர்.