மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு



சென்னை: மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித வளங்களின் செயல்திறனை வரிசைப்படுத்தி மதிப்பாய்வு செய்தல், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்கி விரைந்து திட்டங்களை செயல்படுத்துவது, அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்த, நடு நிலைப்படுத்த உரிய திருத்தங்களைச் செய்ய பரிந்துரைகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதி நிலைமையை மதிப்பாய்வு செய்தல், திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெறப்பட்ட புகார்கள், முறைகேடுகள் குறித்த ஆய்வுகள், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீன தயாள் உபாத்தியாய கிராம மின்வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கல் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.