தி.மு.க. அரசின் சாதனைகளை குக்கிராமங்கள் வரை கொண்டு செல்லுங்கள்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்





சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உங்களில் ஒருவன்' என்ற பெயரில் தி.மு.க.வினருக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள மகத்தான பொறுப்பினைச் சுமந்து கொண்டு மாநிலத்தின் நிலையை உயர்த்திடவும், உரிமையை மீட்டிடவும், தொடர்ந்து ஓய்வின்றி உழைத்திட வேண்டியிருப்பதால், அன்பு உடன்பிறப்புகளாம் உங்களுடன் கடிதம் வாயிலாக அடிக்கடி உரையாட முடியவில்லை. எனினும், வாய்ப்பு வரும்போதெல்லாம் கண்ணான கழகத்தினரையும் கனிவான பொதுமக்களையும் நேரில் சந்தித்துக் களிப்புமிகக் கொள்கிறேன். யாரும் விடுபடாமல், அனைத்துத்தரப்பு மக்களின் வாழ்க்கை நிலையும் உறுதியாக உயர்ந்திட வேண்டுமென்றால் அதற்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஏற்றத்தாழ்வின்றி சமச்சீரான வளர்ச்சியைப் பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்துடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் முனைப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல்பட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.

ஒவ்வொரு தமிழரும் நிம்மதியுடன் வாழ்ந்திட கழக அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்திடும் என்கிற உறுதியுடன்தான் நான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். மக்கள் நலனைக் காக்கும் அரசாக, மக்களுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குகிற அரசாக, ஓர் அரசு எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிற அரசாகத் திகழ்கிற தி.மு.க.வின் திராவிட மாடல் அரசுக்கு எதிராக, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்பட பல்வேறு சங்கடங்களையும் குழப்பங்களையும் உருவாக்கிட, அரசியல் எதிரிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சதித் திட்டம் தீட்டி, பொருளில்லாப் புதுப்புது வதந்திகளைப் பரப்பிட நினைக்கிறார்கள்.

நல்லரசைக் கெடுக்க நினைக்கிற அத்தகையவர்களின் நயவஞ்சக எண்ணத்தை நசுக்கி, முனை மழுங்கச் செய்ய வேண்டிய பெரும்பணி தி.மு.க.வின் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் உண்டு. எதிரிகள் நமக்கு எதிராக வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொல்லாங்குகளையும், பச்சைப் பொய்களையும் பரப்புவார்கள். உண்மைகள் நம் பக்கமே இருப்பதால், அந்தப் பொய்களை நாம் பொடிப்பொடியாக்கித் தூக்கி எறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக வெற்று வதந்திகளைக் கிளப்புவார்கள்; அவற்றைப் புள்ளிவிவரங்கள் மூலம் அறுத்தெறிய வேண்டும். எதிரிகள் நமக்கெதிராக அவதூறுகளைக் கட்ட விழ்த்து விடுவார்கள். அவற்றை அடித்து நொறுக்குகின்ற வகையில் நம்மிடம் குவிந்துள்ள சாதனைத் திட்டங்களை முன் வைக்க வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.