கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
திடீர் டெல்லி பயணம்
திருப்பதி: தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், எதிர்கட்சியாக உள்ள பா.ஜ.க.வுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் சந்திர சேகர ராவ் பா.ஜ.க.வையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார். இந்த நிலையில் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுப்பதற்காக தலா ரூ.100 கோடிக்கு பேரம் பேசியதாக கூறி 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் பா.ஜ.க.வை சேர்ந்த தருமபுரி அரவிந்த் எம்.பி முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா காங்கிரஸில் சேர உள்ளதாக கூறிய சம்பவத்தில் டி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் மீது கற்களை வீசி சரமாரியாக தாக்கினர். இதில் தர்மபுரி அரவிந்தன் வீட்டு கதவு ஜன்னல்கள் உடைந்து சேதம் அடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தாக்குதல் சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாக தர்மபுரி அரவிந்த் எம்.பி குற்றச்சாட்டு எழுப்பினார். இந்த நிலையில் தெலுங்கானா அமைச்சராக உள்ள மல்லா ரெட்டி வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவசர அவசரமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தெலுங்கானாவில் உள்ள போலீசார் ஆளுங்கட்சிக்கு கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே தெலுங்கானா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்க சென்று உள்ளதாக கூறப்படுகிறது.