அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்திட, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மிக மிக அடிப்படையான கொள்கையை நிலைநாட்டுவதற்காக, மிக மிக அவசரமான நிலையில் இந்தச் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டமானது இங்கு கூட்டப்பட்டுள்ளது என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். நூற்றாண்டு காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வந்த சமூகநீதிக் கொள்கைக்கு இன்று பேராபத்து சூழ்ந்திருக்கிறது. சாதியின் பேரால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டு, அவர்களுக்கு கல்வியையும், வேலைவாய்ப்பையும் கொடுத்து அனைத்திலும் முன்னேற்றுவதற்குப் பயன்படும் மாபெரும் தத்துவம்தான் சமூகநீதிக் கொள்கை.
1920-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தை இரட்டையாட்சி முறைப்படி ஆட்சி செலுத்திய நீதிக்கட்சியின் ஆட்சியானது, வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தது. காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அதன் பிறகுதான் பள்ளி, கல்லூரிகளுக்குள் நுழைந்தார்கள். அப்படிக் கிடைத்த கல்வியின் மூலமாக வேலைவாய்ப்பை அடைந்தார்கள். 1920-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரையிலான முப்பதாண்டு கால முன்னேற்றத்துக்கு வேட்டு வைக்கும் விதமாக கம்யூனல் ஜி.ஓ. ஆணையானது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 1950-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் போர்க்கொடி தூக்கினார். பேரறிஞர் அண்ணா தமது வலுவான வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் கர்மவீரர் காமராசர் தமிழ்நாட்டின் போராட்ட நிலைமைகளை டெல்லிக்கு எடுத்துச் சொன்னார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக அமைந்த அண்ணல் அம்பேத்கர் அப்போது சட்ட அமைச்சராக இருந்தார். ஜனநாயகத் தன்மைகளை உணர்ந்த ஜவகர்ஹர்லால் நேரு அப்போது இந்தியப் பிரதமராக இருந்தார். இவை அனைத்தும் இணைந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தமாக ஏற்படுத்தப்பட்டது. "சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது'' என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம் ஆகும். இந்தத் திருத்தத்துக்குக் காரணம், 'ஹாப்பனிங்ஸ்இன் மெட்ராஸ்' என்று பாராளுமன்றத்திலேயே சொன்னார் அன்றைய பிரதமர் நேரு.
இத்தகைய அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தம் தான் இந்தியா முழுமைக்குமான மக்களது நல்வாழ்வுக்கு வழிகாட்டியது. கடந்த முக்கால் நூற்றாண்டு கால சமூக முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைந்திருந்தது. சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பின் தங்கியவர்கள் என்பதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340-வது பிரிவில் 'சோசியலி அன்ட் எஜுகேஷனலி பேக்வேர்ட்' என்பதுதான் வரையறையாக உள்ளது. அதே சொல்தான் அரசியலமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது. அதாவது, சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை. அதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு.
அதன்படி ஒரு சட்டத்தை 2019-ம் ஆண்டு செய்தார்கள். அந்தச் சட்டத்தைத்தான் தற்போது உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளார்கள். சமூகத்தில் முன்னேறிய சாதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசினுடைய திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது, திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். இதன் சூட்சமத்தை நான் விளக்கமாகச் சொல்லத் தேவையில்லை. இதற்குள் இருக்கும் அரசியல் லாப நோக்கங்கள் குறித்து இந்த இடத்தில் நான் பேசவும் விரும்பவில்லை. எந்த நோக்கம் அவர்களுக்கு இருந்தாலும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு முரணானது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தை முன் வைத்து பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது 'எகனாமிகலி' என்ற சொல்லையும் சேர்க்கச் சொல்லி சில உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். இதனை பிரதமர் நேருவும் ஏற்கவில்லை. சட்ட அமைச்சர் அம்பேத்கரும் ஏற்கவில்லை. 'எகனாமிகலி' என்ற சொல்லை சேர்க்கலாமா என்பது குறித்து பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு ஆதரவாக 5 வாக்குகள் மட்டுமே விழுந்தது. 'எகனாமிகலி' என்ற சொல்லைச் சேர்க்கக்கூடாது என்று 243 வாக்குகள் விழுந்தன.
இப்படி இந்திய பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட கருத்துதான் பொருளாதார அளவுகோல். இன்றைக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் மூன்று நீதிபதிகள் ஆதரித்துள்ளார்கள். ஆனால், 1992-ம் ஆண்டு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வானது பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பானது 16-11-1992 அன்று வழங்கப்பட்டது. ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அப்போது வழங்கிய தீர்ப்பில், ''பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு அரசின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளவை பொருத்தமில்லாதது" என்று கூறப்பட்டுள்ளது. எனவே தான், சமூகநீதிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மை அமர்வுக்கும் எதிரானதாக ஒன்றிய அரசின் சட்டத்திருத்தம் அமைந்து உள்ளதை நாம் எதிர்க்க வேண்டியதாக இருக்கிறது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்வதைத் தடுப்பதாக யாரும் இதனைக் கருதத் தேவையில்லை. ஏழைகளுக்கான எந்தத் திட்டத்தையும் நாம் தடுக்க மாட்டோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது தான் பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த அறநெறி. ஏழை எளிய மக்களை முன்னேற்றும் எத்தனையோ சமூகநலத் திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
கழக அரசின் பெரும்பாலான சமூகநலத் திட்டங்கள் ஏழை மக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவைதான். இத்தகைய திட்டங்கள் குறிப்பிட்ட சாதி ஏழைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து ஏழை எளிய மக்களுக்காகவும்தான். அந்த வகையில், ஏழை மக்களின் வறுமையைப் போக்க எந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தாலும், அதனை ஆதரிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆனால், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையை மடைமாற்றும் திருகுவேலையை இடஒதுக்கீடு அளவுகோலாக மாற்றக்கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள். உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஓ. சின்னப்ப ரெட்டி ஒரு தீர்ப்பின்போது "ரிசர்வேஷன் இஸ் நாட் எ பவர்ட்டி அலிவியேஷன் ஸ்கீம்" என்று குறிப்பிட்டார். ஈராயிரம் ஆண்டுகளாக கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்ட சமூகத்தைத் தூக்கி விடுவதுதான் சமூக நீதியே தவிர, அது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல என்பதை உச்சநீதிமன்றம் ஏராளமான தீர்ப்புகளில் சொல்லியிருக்கிறது. இன்னும் சொன்னால், முன்னேறிய சாதி ஏழைகளுக்காக உருவாக்கப்பட்டதாகவும் இந்தச் சட்டத்திருத்தம் இல்லை என்பதுதான் உண்மை.
ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு கீழே உள்ளவர்கள் இதன் பயனைப் பெறலாம் என்கிறார்கள். அப்படியானால் மாத வருமானம் 66,660 ரூபாய் பெறுபவர்கள் ஏழைகளா? தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? அந்த வகையில் பார்த்தால் இதன் நோக்கம் முன்னேறிய சாதி ஏழைகளின் வறுமையை ஒழிப்பதாகவும் இல்லை. ஆண்டு வருமானம் இரண்டை லட்சத்துக்கும் குறைவானவர்கள் வருமான வரிக்கட்டத் தேவையில்லை என்று சொல்லும் பா.ஜ.க. அரசு 8 லட்சம் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்பது எப்படி? கிராமமாக இருந்தால் தினமும் 27 ரூபாயும் நகரமாக இருந்தால் தினமும் 33 ரூபாயும், இதற்குக் கீழ் சம்பாதிப்பவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களாகச் சொல்கிறது ஒன்றிய அரசு. இந்த மக்களுக்கு எத்தகைய பொருளாதார உதவிகளையும் அரசு வழங்கலாம், யாரும் தடுக்கவில்லை. "பிலோ தி பவர்ட்டி லைன்" என்று இதனைச் சொல்லும் அதே அரசு, தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்களை ஏழைகள் என்று சொல்கிறது என்றால், இதனைவிட கேலிக்கூத்து ஒன்று இருக்க முடியாது. ஐந்து ஏக்கருக்கும் குறைவாக வைத்திருப்பவர்கள், 1000 சதுர அடி நிலத்திற்குக் குறைவாக வைத்திருப்பவர்கள் ஏழைகளாம். இந்த இடத்தில் நாம் கவலைப்படும் 'வர்க்கம்' என்பதும் அடிபட்டு விடுகிறது. என்னைப் பொறுத்தவரையில், முன்னேறிய சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு அல்ல இது. முன்னேறிய சாதியினருக்கான இட ஒதுக்கீடாகத்தான் இதனைச் சொல்ல வேண்டும். இந்த வகையில், இந்திய அரசியலமைப்பின் 103-வது திருத்தம் என்பது சமூகநீதிக்கு எதிரானது; அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரானது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது; உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கும் எதிரானது;
ஏழைகளுக்கு எதிரானது என்பதால் நாம் எதிர்க்க வேண்டியதாக உள்ளது. இந்தச் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டால் காலப்போக்கில் சமூகநீதி தத்துவமே உருக்குலைந்து போகும். 'சோசியலி அன்ட் எஜுகேஷனலி பேக்வேர்ட்' என்பதையே பின்னர் எடுத்து விடுவார்கள். பொருளாதார நிலை என்பதையே அனைத்துக்கும் கொண்டு வந்துவிடுவார்கள். அதனால்தான் பாராளுமன்றத்தில் நாங்கள் இதனை கடுமையாக எதிர்த்தோம். எதிர்த்து வாக்களித்தோம். உச்சநீதிமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வழக்கு தாக்கல் செய்தது. மிகக்கடுமையாக எதிர்வாதங்களை வைத்தது. பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு வேறாக இருந்தாலும், முழு அமர்வும் இத்திருத்தத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இந்த நிலையில் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு, சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக சில செயல்களைச் செய்தாக வேண்டும். அந்தக் கடமை தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் தமிழக சட்டமன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களை இங்கே அழைத்துள்ளோம்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், தேசிய இயக்கமாக இருந்தாலும், பொதுவுடமை இயக்கமாக இருந்தாலும், மற்ற எந்தக்கொள்கை நோக்கத்தோடு உருவான இயக்கங்களாக இருந்தாலும் சமூகநீதித் தத்துவத்தை பொறுத்தவரையில், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, ஆதரிக்கும் இயக்கமாகவே கடந்த காலத்தில் செயல்பட்டு வந்துள்ளீர்கள் என்பதை நானும் அறிவேன்; இந்த நாட்டு மக்களும் நன்கறிவார்கள். அரசின் அழைப்பினை ஏற்று வருகை தந்துள்ள உங்கள் அனைவர்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் அனைத்தையும் அறிந்தவர்களாகவே அனைவரும் கூடியிருக்கிறோம். எனவே கூறியது கூறல் தவிர்த்து, அடுத்தகட்டமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக்களை சில மணித்துளிகளில் அனைவரும் அமைத்துக் கொண்டால் நலமாக இருக்கும். சமூகநீதிக்கு ஆபத்து வரும் போதெல்லாம் தமிழ்நாடு காப்பரணாக அமைந்துள்ளது. அந்த வகையில் இக்கூட்டத்துக்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.