பிரதமர் மோடியை சந்திக்க ஜோபைடன் ஆர்வமாக உள்ளார்- அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் தகவல்



வாஷிங்டன்: ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலியில் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டின் போது ஜோபைடன்-ஜின்பிங் சந்தித்து பேச இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லியன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த போது, இந்திய பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு சென்று ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஜேக் சுல்லியன் பதில் அளித்து கூறியதாவது:- அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. இதனால் ஜி-20 மாநாட்டில் அதிபர் ஜோபைடன் நிச்சயம் கலந்து கொள்ளும் நோக்கத்துடன் உள்ளார். ஜோபைடன் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி பல முறை வந்துள்ளார். அவர்கள் பல்வேறு முறை நேரடியாக சந்தித்தோ, தொலைபேசி மற்றும் வீடியோ மூலமாகவோ பேசி உள்ளனர். பல்வேறு நெருக்கடியான விஷயங்களில் இருவருக்கும் இடையே சரியான மற்றும் பலனளிக்க கூடிய நட்புறவு இருந்து வருகிறது. இந்தியா-அமெரிக்கா நல்லுறவை வலுப்படுத்த இருவரும் பணியாற்றி வருகிறார்கள். இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க அதிபர் ஜோபைடன் ஆவலுடன் உள்ளார். அடுத்த ஆண்டும் மோடியை ஜோபைடன் சந்தித்து பேசுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.