234 தொகுதிகளுக்கும் பா.ஜனதா முழு நேர ஊழியர்கள் நியமனம்- பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அதிரடி வியூகம்




சென்னை: தமிழக பா.ஜனதா 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. பா.ஜனதா வலுவாக இல்லாத மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. வருகிற தேர்தலில் கணிசமான எம்.பி.க்களை பெறுவதற்கான வழிமுறைகளை டெல்லி மேலிடம் வகுத்து வருகிறது. முதற்கட்டமாக மத்திய மந்திரிகளை மாவட்ட வாரியாக அனுப்பி மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவு மக்களை சென்றடைந்துள்ளது என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். இதுபற்றிய அறிக்கை இந்த மாத இறுதியில் பிரதமர் மோடியிடம் வழங்கப்படுகிறது. அடுத்ததாக தேர்தல் பணிகளை பூத் வாரியாக மேற்கொள்ளவும் பார்வையிடவும் முழு நேர ஊழியர்களை நியமிக்கிறார்கள்.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா ஒரு ஊழியர் நியமிக்கப்படுகிறார். இவர்களுக்கு மாத சம்பளம் ரூ.15 ஆயிரம் வரை வழங்க திட்டமிட்டுள்ளனர். இது தவிர பெட்ரோல் அலவன்சும் வழங்கப்படும். இவர்கள் தினமும் பூத்களுக்கு சென்று பார்வையிட வேண்டும். கிளை கமிட்டி நிர்வாகிகளிடம் பேச வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் இருக்கும் வாக்காளர்களில் 40 சதவீதம் பேரை பா.ஜனதா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வலுவாக இல்லாத பூத்களை வலுப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். வாரம் தோறும் பணி விவரங்களை மாவட்ட தலைவர், மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வரை இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊழியர்கள் தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. நவம்பர் 1-ந்தேதி முதல் அனைத்து தொகுதிகளிலும் பணிகள் தொடங்க உள்ளது.