சென்னை பல்கலைக்கழக
ஆன்லைன் தேர்வுமோசடி
உடந்தையாக இருந்த 5 அதிகாரிகள்
சஸ்பெண்டுசென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அப்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. அரியர் உள்பட அனைத்து தேர்வுகளையும் வீட்டில் இருந்தே எழுத அனுமதி அளிக்கப்பட்டது. சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைநிலை கல்வி பிரிவு நடத்திய இந்த தேர்வில் சிலர் பல்கலைக் கழகத்தில் சேராமலேயே கடைசி நேரத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்து வீட்டில் இருந்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது 116 பேர் பல்கலைக்கழக படிப்பில் சேராமல் தேர்வுக்கு மட்டும் விண்ணப்பித்து பட்டம் வாங்க முயன்றதும், பல்கலைக் கழகத்தின் அதிகாரிகள் சிலர் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்கள் தேர்ச்சி பெறுவது வரை உதவி இருப்பதும் உறுதியானது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் பி.காம், பி.பி.ஏ. பட்டங்களை பெற முயன்றுள்ளனர். இதில் மோசடிக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு அவர்கள் ரூ.3 லட்சம் வரை லஞ்சம் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. ஆனால் அவர்களுக்கான கல்வி கட்டணம் ரூ.20 ஆயிரம் மட்டுமே ஆகும்.

இதுகுறித்து தொலை நிலை கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் முதல் கட்ட விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரியிடம் தாக்கல் செய்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்வர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை வேந்தர் கவுரி உத்தரவிட்டார். இந்த மோசடி தொடர்பாக விசாரிக்க பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் சார்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டப்படிப்புகள் துறை இயக்குனர் சொக்கலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தேர்வர்கள், சேர்க்கை மையத்தினர், பல்கலைக்கழக ஊழியர்கள் தேர்வுத் துறையினரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 116 பேர் போலி மாணவர்களாக தேர்வு எழுதி 'ஆல் பாஸ்' முறையில் பட்டம் பெற முயன்றதும், பல்கலைக்கழக ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு இதற்கு உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மோசடியில் தொடர்புடைய 2 உதவி பதிவாளர்கள் உள்பட 5 பேரை சஸ்பெண்டு செய்ய விசாரணை குழு பரிந்துரை செய்தது. இதற்கு சிண்டிகேட் குழுவும் ஒப்புதல் அளித்தது. இதன் அடிப்படையில் உதவி பதிவாளர்கள் தமிழ்வாணன், மோகன் குமார், உதவி பிரிவு அதிகாரிகள் எழிலரசி, சாந்தகுமார், உதவியாளர் ஜான் வெஸ்லின் ஆகிய 5 பேரை சஸ்பெண்டு செய்து துணை வேந்தர் கவுரி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.