அரசின் மதுக்கடைகளை
அடித்து நொறுக்கும் பெண்கள்மாற்று வழியை அரசு தேடுமா?
அடித்து நொறுக்கும் பெண்கள்
பாரதியின் புதுமைப் பெண்கள் தமிழக கிராமங்களில் படையெடுக்க தொடங்கி உள்ளார்கள். இந்த படையெடுப்பின் மூலம் மது கடைகளுக்கு எதிராகவும், மது அரக்கணை ஒழிப்பது என்ற உறுதிமொழியும் ஏற்று அரசின் மதுக்கடைகளை உடைத்து நொறுக்குகின்ற அளவிற்கு புறப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நகரத்துப் பெண்கள் மதுவிற்பனை கடைகளுக்கு அருகிலேயே ரசித்து கொண்டிருந்தாலும் மது கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவில்லை கண்டும் காணாமலும் சென்று விடுகிறார்கள். ஆனால் கிராமத்துப் பெண்கள் அப்படியல்ல. ஒரு காலத்தில் புலியை முறத்தால் அடித்து நொறுக்கிய அந்த புரட்சிப் பெண்களின் வாரிசாக இன்றைக்கும் தமிழ்நாட்டின் கிராமங்கள் தோறும் வசித்து வருகிறார்கள். குறிப்பாக சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில், ஒரு கிராமத்தில் புதிதாக திறக்கப்பட இருந்த ஒரு மதுப்பான கடையை பெண்கள் ஒன்றுக் கூடி அடித்து நொறுக்கி கடைகளை உடைத்தெறிந்து அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதே போல் காஞ்சிப்புரம் மாவட்டத்தில் ஒரு இடத்தில் பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மதுக்கடையை உடைத்து எறிந்து இருக்கிறார்கள்.
இத்தகைய செயல் எதை காட்டுகிறது என்றால் அரசே மது விற்பதினால் பள்ளிக்கு செல்லுகின்ற சிறுவர் முதல் பள்ளி மாணவிகள் கூட மதுவுக்-கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள் என்பதை அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. இது மட்டுமல்ல பள்ளி முதல் கல்லூரி வரை போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்து ஆடுவதாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக செய்திகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஊட்டுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தமிழகமே போதையில் மிதக்கிறது என்ற அவப்பெயருக்கும் ஆளாகும் வேண்டிய சூழல் தோற்றுவிக்கப்படும். இந்த நிலைகளை கண்டு காணாமல் இருப்பதை விட இவற்றுக்கு தீர்வு காணவேண்டும் என்ற பெரும் முயற்சியில் பெண்களே ஈடுபடுகிறார்கள் என்கின்ற பொழுது இத்தகைய முயற்சியை ஆண்களும் ஆதரிக்க வேண்டுமே தவிர ஆண்களுக்கு பெண்கள் அடிமை என்ற மனோநிலையில் தொடர்ந்து இருப்பதை தவிர்த்திட வேண்டும். எதிர்காலம் என்பது குடும்பத்தலைவன் என்ற நிலைமாறி குடும்ப தலைவி என்ற நிலை வளருமே ஆனால் தமிழ்நாட்டில் அரசாங்கமே மது விற்பதை வாபஸ் பெற்றுக் கொண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படலாம் இதன் மூலம் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்தப்படலாம். இதன் முன்னோட்டமாக தான் கிராமங்களில் தொடங்கிய இந்த புதுமைப் பெண்கள் புரட்சி என்பது மதுவிலக்கு எதிரான போராட்டமாக நாளை நகரங்களிலும் தொடருவதற்கான வாய்ப்பு உருவாகலாம்.
அதனால் அரசு வருவாய் இழப்பை சந்திக்க நேரிடலாம். மதுவை ஒழிக்க வேண்டும் என்று பெண்கள் விழித்துக் கொண்டதைப் போன்று அரசாங்கம் சுதாகரித்துக் கொண்டு மதுவினால் வருகின்ற வருவாயை மாற்றுத் திட்டத்தினால், மாற்று வழிகள் மூலம் தேவையான வருவாயை உருவாக்குவதற்கு தயாராக வேண்டும். இதற்கு மாறாக மாணவர் சமுதாயத்தையும் பெண்கள் சமுதாயத்தையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தால் அரசாங்கம் அரசின் செயல்பாடுகள் தோல்வியில் தான் முடியும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பதை நினைத்து மதுவில்லாத மாநிலமாக தமிழகம் மாறவேண்டும் அல்லது பெண்களால் மாற்றி காட்ட முடியும் என்பதை தான் பிரதிபலிக்கிறது மேலே உள்ள இரண்டு காட்சிகள்.
- டெல்லிகுருஜி