ஒரேமொழி-ஒரேகல்வி என்னும் திணிப்பை மத்திய அரசு கைவிடவேண்டும:
திருமாவளவன் கோரிக்கைசென்னை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனுடைய பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர் நாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த ஒருவர் இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்தார் என்பது போற்றுதலுக்குரியது. எனினும், நாட்டின் நலத்தையும் வளத்தையும் தீர்மானிக்கும் நல்ல ஆளுமைகளை வளர்த்தெடுக்கும் ஆசிரியப் பணியே சிறப்புக்குரியது என்னும் அடிப்படையில், தனது பிறந்தநாளை ஆசிரியர் நாளாக நினைவுகூர்ந்திட விரும்பினார்.

அவரின் விருப்பப்படியே ஆண்டுதோறும் இந்நாள் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய பெருமைக்குரிய இந்நாளில் ஆசிரியர்கள் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கல்வியும் ஒழுக்கமும் கற்பிக்கப்படும் பள்ளிகளே ஒரு தேசத்தின் எதிர் காலத்தை வரையறுக்கும் கருத்தியல் களங்களாக விளங்குகின்றன. ஆகவே பள்ளிகளும் பள்ளி ஆசிரியர்களும் நாட்டின் இன்றியமையாத பெருஞ்சொத்துகள். மாணவர்களின் தேவைக்கேற்ப பள்ளிகளைப் பெருக்குவதும் பராமரிப்பதும் தவிர்க்கமுடியாத தேவையாகும். அதேபோல மாணவர்களுக்குத் தேவையான ஆசிரியர்களை நியமிப்பதும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதும் முதன்மையானதாகும். அதற்கு கல்விக்கென போதிய நிதி ஒதுக்கீடு செய்ய இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் முன்வர வேண்டும். அத்துடன், இந்திய அரசு, கல்வி தொடர்பான அதிகாரத்தை ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும். அப்போதுதான் மாநிலம் சார்ந்த சமூகம், அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கல்வியை மேம்படுத்திட இயலும். எனவே, கல்வியை மாநிலப் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை என்னும் பெயரில் ஒரே மொழி-ஒரே கல்வி எனும் மேலாதிக்கத் திணிப்பைக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.