அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்
24 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு


சென்னை: தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவ-மாணவிகள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக பி.காம், பி.ஏ. ஆங்கிலம் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுகளை போலவே இந்த வருடமும் கலை அறிவியல் பாடப் பிரிவுகள் மீது இருந்த மோகம் குறையவில்லை. 4 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அரசு போட்டி தேர்வு, வங்கி தேர்வு, ரெயில்வே உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு பட்ட படிப்பு ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமானது. பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள் 3 ஆண்டு பட்டப் படிப்பை படித்து முடித்து சிறந்த பயிற்சி மையங்கள் மூலம் போட்டி தேர்வை எதிர் கொள்ள முடியும் என்ற எண்ணம் இன்றைய மாணவர் சமுதாயத்திற்கு ஏற்பட்டு இருப்பதால் பெரும்பாலானவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளை நாடுகிறார்கள்.

தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மூலம் ஏழு லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. ஆனால், 4 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 2.98 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் தகுதியானதாக ஏற்று கொள்ளப்பட்டன. ஒரு சில மாணவர்கள் 3, 4 பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் சுழற்சி வட்டத்திற்கும் குறைவாகவே கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டினர். ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தான் அரசு கலை கல்லூரிகளில் அதிகளவு சேர விண்ணப்பிப்பார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய கூலி வேலை செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இடங்களுக்கு அலைந்து திரிவார்கள். அந்த அடிப்படையில் கடந்த மாதம் கட் ஆப் மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. இந்த வருடம் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்கள் மதிப்பெண்களை குவித்ததால் கடுமையான போட்டி ஏற்பட்டது. இதனால் பல ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் கூடுதலாக இடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த அடிப்படையில் கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக் கேற்ப 20 சதவீதமும் கூடுதலாக சேர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதே போல அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 15 சதவீதம் சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். அந்த வகையில் அரசு கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்கள் தற்போது அதிகரிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 24 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கும். இவை இடம் கிடைக்காமல் காத்து இருக்கின்ற ஏழை மாணவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. பி.ஏ, பி.காம், பி.எஸ்.சி. போன்ற பட்ட படிப்புகளில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்து கடைசி நேரத்தில் மதிப்பெண் குறைவால் சேர முடியாமல் போன மாணவ-மாணவிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளது. ஏற்கனவே முடிந்துள்ள கட் ஆப் மதிப்பெண்ணை தொடர்ந்து வரும் மாணவ மாணவிகளுக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். ஒரு வேளை அந்த மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து இருந்தால் அதனை அடுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார்.