ஒவ்வொரு இந்தியருக்கும் சிறந்த கல்வி மற்றும் சுகாதாரம் கிடைக்கும் போதுதான் மூவர்ண கொடி உயரத்தில் பறக்கும்- அரவிந்த் கெஜ்ரிவால்தலைநகர் டெல்லியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில் டெல்லி அரசு சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறந்த கல்வி மற்றம் சுகாதாரம் அனைத்து மக்களுக்கும் கிடைத்தால், நாட்டின் வறுமையை ஒரே தலைமுறையில் ஒழிக்க முடியும் என்றார். அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் போன்ற நாடுகள் தங்களது குடிமக்களுக்கு நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் பணக்கார நாடுகளாக மாறின. அதேபோல் ஒவ்வொரு இந்தியருக்கும் சிறந்த சுகாதார வசதி மற்றும் கல்வி கிடைக்கும்போதுதான் மூவர்ணக் கொடி உயரப் பறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவுக்குப் பிறகு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் தற்போது அவற்றை வழங்கி விட்டன என்றும், அவர் சுட்டிக்காட்டினார். தேசிய தலைநகரில் தற்போது கிடைப்பதை போன்று நாடு முழுவதும் பள்ளிக் கல்வி மற்றும் சுகாதாரத்தை ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்த தர முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மக்களை சிக்க வைக்கும் தூண்டில் போல் இலவச திட்டங்களை கெஜ்ரிவால் வழங்குவதாக பாஜக குற்றம் சாட்டி இருந்தது. இதற்கு பதில் அளித்த அவர், நல்ல கல்வி மற்றும் சிறந்த மருத்துவம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்குவது இலவசம் அல்ல என்று கூறினார்.