சென்னையில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களுக்கு பிங்க் கலர் சேவை- உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சாதாரண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் அறிவித்தார். இத்திட்டம் கிராம மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு பேரூதவியாக இருப்பதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அரசு, தனியார் அலுவலகங்களில் பணிக்கு செல்வோர், கூலி வேலைக்கு செல்லக்கூடியவர்கள், உற்றார் உறவினர் வீடுகளுக்கு அவசரமாக செல்லக்கூடிய பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 1,559 பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 10.50 லட்சம் பேர் இலவசமாக பயணித்து வருகின்றனர்.

சென்னையில் ஓடக்கூடிய மொத்த மாநகர பஸ்களில் 50 சதவீத பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் பெண்களை ஏற்றி இறக்க வேண்டும் என டிரைவர்-கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கட்டணமில்லா பயணம் செய்யக்கூடிய பஸ் எது என்று கண்டு பிடிப்பதில் பலருக்கு சிரமம் இருந்து வந்தது. நகர பேருந்துகள் ஒரே நிறத்தில் வருவதால் சில நேரங்களில் சாதாரண பஸ் எதுவென்று பார்க்காமல் பெண்கள் ஏறி விடுகின்றனர். பின்னர் கீழே இறக்கி விடப்படும் நிலை உள்ளது. இதனை போக்குவதற்காக இலவசமாக பெண்கள் பயணிக்கக் கூடிய பஸ்களை எளிதாக அடையாளம் காணும் விதமாக "பிங்க்" வர்ணம் பூச முடிவு செய்யப்பட்டது.

அதன்படி சென்னையில் முதல் கட்டமாக 50 பஸ்கள் 'பிங்க்" நிறத்திற்கு மாற்றப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. பிங்க் நிற பஸ் சேவையை சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார். இதே போல மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 10 மினி பஸ் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மண்டல தலைவர் மதன்மோகன், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.