வேலைவாய்ப்பை உருவாக்க ரெயில் நிலையங்களில் டிக்கெட் வழங்க
தனியார்கள் நியமனம்புதுடெல்லி: ரெயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஆன்லைன் முறை ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் கவுண்டர்களில் டிக்கெட் விற்பனை குறைந்து வருகிறது. தற்போது வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு டிக்கெட் விற்கும் வேலை வழங்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. முதலில் நகர்ப்புறங்களில் இந்த வசதியை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். முதலில் வடகிழக்கு ரெயில்வேயில் இந்த திட்டம் அறிமுகமாகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரெயில்வே நிர்வாகமே இடம், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும். ரெயில் நிலையத்தின் வருமானத்துக்கு ஏற்ப டெபாசிட் நிர்ணயிக்கப்படும். இவர்கள் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள், மாதாந்திர சீசன் டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்வார்கள். விற்பனைக்கு ஏற்றபடி அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும். கோரக்பூர் டிவிசனில் விரைவில் இந்த திட்டம் தொடங்க உள்ளது.