விதிகளை பின்பற்றாமல் இருந்தால் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும்- அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதி கருத்துசென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் கோர்ட்டில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒப்புதல் அளிக்காததால் செயல்பட முடியவில்லை என கூறுவது தவறு என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவை கூட்டக்கோரி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் விண்ணப்பிக்க முடியும், இது சம்பந்தமான விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது. கட்சியினரின் விருப்பத்தை ஏற்று நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருப்பார் என 2017ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் எனக் கூறிவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன்? பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என விளக்க வேண்டும் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர். பெரியாரை மட்டுமே தலைவராக ஏற்று கொள்வதாக கூறியே பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்தார். பொதுக்குழுவின்போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.