புதுவையில் இரட்டை ஆட்சி இல்லை
மத்திய மந்திரி முருகன் பேட்டிபுதுச்சேரி: புதுவை பா.ஜனதா பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். 3 நாள் பயணமாக புதுவைக்கு வந்த அவர் பா.ஜனதா சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பா.ஜனதாவின் சமூக ஊடகம், தகவல் தொழில்நுட்பம், ஊடகப் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன் குமார், வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் மோகன்குமார், ஊடகப்பிரிவு பொறுப்பாளர் அகிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:- 8 ஆண்டாக பிரதமர் மோடி சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளார். எண்ணற்ற சாதனைகளை மத்திய அரசு செய்துள்ளது. மத்திய அரசின் தாரக மந்திரம், சேவை, நல்ல அரசாங்கம், ஏழைகளின் நண்பன் என்பதுதான். 75-வது சுதந்திர தின ஆண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறது. 2047-ல் சுதந்திர ஆண்டில் நாடு சிறப்பான வளர்ச்சி மிக்க நாடாக, அனைத்து மக்களுக்கும், அனைத்து அடிப்படை தேவைகளும் கிடைத்திருக்க வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகிறது. அனைவரும் இணைந்து, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதே அரசின் நோக்கம். பெஸ்ட் புதுவையை உருவாக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. 8 ஆண்டில் ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேலான திட்டங்களை புதுவைக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை ரெயில்நிலையம் ரூ.90 கோடியில் மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மருத்துவமனைகள் ரூ.30 கோடியில் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊரக மேம்பாடு கட்டமைப்புக்கு ரூ.50 கோடி, ஜிப்மருக்கு ரூ.500 கோடி, ஆயுஷ்மான்பாரத் திட்டத்தின் கீழ் ரூ.1.77 லட்சம் பேர் காப்பீடு அட்டை பெற்றுள்ளனர். விவசாயிகளுக்கு ரூ.21 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.ஆயிரத்து 830 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கி பணிகள் நடந்து வருகிறது. மத்திய உள்துறை மந்திரி ரூ.600 கோடி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் புதுவையின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு ரூ.80 கோடி கோரியுள்ளனர். விரைவில் இந்த நிதி வழங்கப்படும். நடமாடும் கால்நடை மருத்துவமனை 5 கோரியுள்ளனர். முதல்கட்டமாக ஒன்று வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கூடுதலாக கால்நடை மருத்துவமனை வழங்கப்படும். மத்திய அரசின் பல திட்டங்கள் இங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. 35 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், கழிப்பறைகள் என மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழைகளின் நலனுக்காகவும், நல்லாட்சி தரும் அரசாகவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தரும் அரசாகவும் செயல்பட்டு வருகிறது.

புதுவையின் வளர்ச்சி தேசிய ஜனநாயக கூட்டணியின் வளர்ச்சியாக கருதி பணிகளை செய்து வருகிறோம். புதுவையில் இரட்டை ஆட்சி கிடையாது. புதுவை மாநில வளர்ச்சிக்காகவும் மக்கள் நலனுக்காகவும் கவர்னரும், முதல்-அமைச்சரும் இணைந்து பணியாற்றுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அவற்றை விரைவுபடுத்த அறிவுறுத்தி உள்ளோம். இலங்கை அரசு தொடர்ந்து இந்திய மீனவர்களை கைது செய்து வருகிறது. அவர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரைக்கால் மீனவர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை-இந்திய கூட்டு கூட்டம் நடத்தி பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த கூட்டத்தை கூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.