மெயினருவி, ஐந்தருவியில்
கடும் வெள்ளப்பெருக்கு
சுற்றுலா பயணிகள் குளிக்க தடைதென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் குற்றாலத்தில் தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இன்று அதிகாலை முதலே தென்காசி பகுதியில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல மழை அதிகமாக பெய்தது. மதியம் 12 மணி அளவில் மெயினருவி, ஐந்தருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அந்த இரு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். மெயினருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.