தமிழகம் முழுவதும் கமல் ஹாசன்
விரைவில் சுற்றுப்பயணம்சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமல் ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார். 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இப்போதே தயாராக வேண்டும் என்று கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார். "சீரமைப்போம் தமிழகத்தை" என்கிற முழக்கத்தோடு பல கட்டங்களாக சுற்றுப் பயணம் மேற் கொள்ள இருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணத்தை கட்சியின் அடித்தளம் வலுவில்லாமல் இருக்கும் பகுதிகளில் இருந்து தொடங்க இருப்பதாகவும் கமல் ஹாசன் தனது பேச்சின் போது குறிப்பிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை எங்கிருந்து தொடங்கலாம் என்பது பற்றி கட்சியின் மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இதன் மூலம் கமல் ஹாசன் தனது அதிரடி அரசியல் சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்க உள்ளதாக கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகள் தற்போது வெளி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்டமாக தலைவர் கமல் ஹாசன் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த பயணம் விரைவில் தொடங்கும். 2024-ல் ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறோம். இதன் அடுத்த கட்ட பாய்ச்சலாகவே கமல் ஹாசனின் சுற்றுப்பயணம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கமல் ஹாசனின் வலியுறுத்தலால் நிறைவேற்றப்பட்ட ஏரியா சபை சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. விரைவில் பெண்கள் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும், நெல் உள்ளிட்ட விவசாய விளை பொருட்களுக்கு போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும், ஊழலுக்கு துணைபோன ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும், மாநிலக் கல்வி கொள்கையானது உலகத் தரத்தில் அமைந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.