சிவசேனாவை சேர்ந்தவர் மீண்டும்
முதல்-மந்திரி ஆவார்: உத்தவ் தாக்கரேமும்பை : சிவசேனா கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே தனது 62-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:- டெல்லி அரசு தற்போது சிவசேனாவுக்கு எதிராக சிவசேனாவுக்குள்ளேயே சண்டையை தூண்டி மராத்தி பேசும் மக்களை பிளவுபடுத்த விரும்புகிறது. தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார்கள் என்றால் அது அவர்களின் திறமையின்மையை காட்டுகிறது. ஜனநாயகத்தில் எந்த கட்சியும் நிரந்தர வெற்றி பெறாது. நான் மேற்கொண்ட மகா விகாஸ் கூட்டணி சோதனையை மக்கள் வரவேற்றுள்ளனர். சிவசேனாவை சேர்ந்தவர் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். இதற்காக கட்சியை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபடுவேன். இதற்காக ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க விரும்புகிறேன். 2019-ம் ஆண்டு பா.ஜனதாவிடம் நான் என்ன கேட்டேன்? 2½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவி, அது ஒப்புக்கொள்ளப்பட்டது. இதுவும் எனக்காக இல்லை. நான் சிவசேனாவை சேர்ந்தவரை முதல்-மந்திரி ஆக்குவேன் என்று சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயிடம் வாக்குறுதி அளித்திருந்தேன். எனது வாக்குறுதி இன்னும் முழுமையடையவில்லை.

2019-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்ட அனைத்தையும் மறுத்ததன் மூலம் பொய்யின் அனைத்து எல்லைகளையும் பா.ஜனதா கடந்தது. இதனால் மகா விகாஸ் அகாடி பிறந்தது. ஆனால் தற்போது அதிருப்தியாளர்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சிவசேனாவுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறுகின்றனர். இது வெறும் சாக்குப்போக்கு தான். அவர் (ஏக்நாத் ஷிண்டே) முதல்-மந்திரி பதவியை மிக மோசமான முறையில் பெற்றுள்ளார். அதிகார மோகத்தில் இப்படி செய்துவிட்டு தன்னை மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுடன் ஒப்பிட்டு கொள்கிறார். நாளை அவர் தன்னை நரேந்திர மோடி என்று கூறிக்கொண்டு பிரதமர் பதவிக்கு கூட உரிமை கோர வாய்ப்பு உள்ளது. பா.ஜனதாவினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.