சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம்- தேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் விசாரணை



சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்தார். இந்த சம்பவத்துக்கு நீதிகேட்டு அமைதியான போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி அன்று இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவிற்கு கலவரமாக மாறியது. அதன் பிறகு டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டனர். பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு போராட்டக்காரர்களை பிடிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து 308 பேர் இதுவரைக்கும் கைது செய்துள்ளனர்.

பின்பு மாநில அளவில் இந்த கலவரம் பேசப்பட்ட நிலையில் தாமாக முன்வந்து தேசிய மாநில குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் (27-ந் தேதி) நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநில தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் தலைவர் பிரியங்கானுங்கோ தலைமையில் 7 பேர் குழு இன்று காலை 11:30 மணியளவில் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். ஸ்ரீமதி மாணவி 3-வது மாடியில் இருந்த தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்ட கீழ்தளத்திலும் பிறகு மூன்றாவது மாடி மற்றும் மாணவி தங்கி இருந்த விடுதி மொட்டை மாடி ஆகிய இடங்களில் பார்வையிட்டனர்.