புகையிலை பாக்கெட்டுகளில் டிசம்பர் 1 முதல் புதிய சுகாதார எச்சரிக்கை படம்



நாட்டில் வரும் டிசம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லது பேக்கேஜ் செய்யப்படும் புகையிலை பொருட்களில் 'புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது' என்ற சுகாதார எச்சரிக்கையுடன் கூடிய புதிய படம் பிரசுரிக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. படம் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி ஓர் ஆண்டு காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், 2023-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதிக்கு பிறகு தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் அல்லுது பேக்கேஜ் செயயப்படும் புகையிலை பொருட்களில் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட புதிய சுகாதார எச்சரிக்கைகளின்படி, 'புகையிலை பயன்பத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்' என்று கூடிய சுகாதார எச்சரிக்கை புகைப்படம் இடம்பெறும். அதன்படி, ஜூலை 21, 2022 தேதியிட்ட 2008 ஆம் ஆண்டு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகளில் திருத்தம் மூலம் புதிய சுகாதார எச்சரிக்கைகளை அமைச்சகம் அறிவித்துள்ளது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) மூன்றாவது திருத்த விதிகள், 2022 இன் கீழ் திருத்தப்பட்ட விதிகள் டிசம்பர் 1, 2022 முதல் பொருந்தும். வழிகாட்டுதல்களை மீறுவது சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் (விளம்பரம் மற்றும் வர்த்தகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் தடை) சட்டம், 2003ன் பிரிவு 20ன் படி சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.