தி.மு.க. தவறு செய்தால் தட்டி கேட்போம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அதிரடி



சென்னை: அகில இந்திய அளவில் காங்கிரசை வளர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றி உதய்ப்பூரில் சோனியா தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் கூடி விவாதித்து பல்வேறு முடிவுகளை எடுத்தனர். அதை உதய்ப்பூர் பிரகடனம் என்று வெளியிட்டனர். அதே போல் தமிழகத்தில் காங்கிரசை வளர்ப்பது தொடர்பாக மாமல்லபுரத்தில் கடந்த வாரம் 2 நாட்கள் கூடி விவாதித்தனர். இதில் 250 நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அப்போது தமிழகத்தில் கட்சி பலவீனம் அடைவதற்கு காரணம் கூட்டணி என்பதற்காக எப்போதுமே தவறுகளை தட்டிக்கேட்பதில்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதில்லை. கூட்டணியை தேர்தலுக்காக மட்டுமே வைத்து கொள்ள வேண்டும். கட்சி பதவி வழங்கும் போது 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் இடம் பெற வேண்டும். ஒருவருக்கு ஒரு பதவி முறையை கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை கூறினார்கள். அவற்றை தொகுத்து மாமல்லபுரம் பிரகடனமாக வெளியிட்டார்கள். 

கட்சியினரின் சிந்தனைகள் அமல்படுத்தப்படுமா? சாத்தியமாகுமா? இதன் மூலம் கட்சி பலமடையுமா? என்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- மாமல்லபுரம் கூட்டத்துக்கு பிறகு கட்சியில் புதிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்ந்து கொண்டார்கள். நிர்வாகிகள் தெரிவித்த பல்வேறு விஷயங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்சி பதவி வழங்குவதில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி விட்டோம். 100 மாநில செயலாளர்கள் நியமித்தோம். அதில் 50 சதவீதத்துக்கும் மேல் 50 வயதுக்கும் குறைவானவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்கள். விளிம்பு நிலையில் இருப்பவர்கள், பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

அதிகார பரவல் என்பதிலும் உறுதியாக இருக்கிறோம். முன்பெல்லாம் 10 முக்கிய தலைவர்கள் கூடி பேசுவார்கள். மற்றவர்கள் வெளியே நிற்பார்கள். அதிகார பரவல் வர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதல் முறையாக 250 நிர்வாகிகளுடன் மாமல்லபுரத்தில் கூடி அமர்ந்து பேசி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக தமிழக அரசு கொண்டு வரும் எல்லா திட்டங்களைகளையும் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில்லையே. உதாரணத்துக்கு சொத்துவரி உயர்வை அரசு கொண்டு வந்ததும் உடனடியாக எதிர்த்து குரல் கொடுத்தோம். ஒரேயடியாக இவ்வளவு உயர்த்துவதை விட ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அடிப்படையில் உயர்த்தலாம் என்று சுட்டிக்காட்டினோம். கடந்த ஓராண்டில் அந்த ஒரு விஷயத்தை தவிர மக்களை நேரடியாக பாதிக்கும் எந்த விஷயத்தையும் அரசு கொண்டு வரவில்லை. எதிர்த்து பேச வேண்டிய சூழல் வந்தால் எதிர்த்து குரல் கொடுக்க தயங்க போவதில்லை. ராஜீவ்காந்தி கொலையாளி பேரறிவாளனை விடுதலை செய்ததையும், கொண்டாடியதையும் நாங்கள் வரவேற்கவும் இல்லை. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்பை தெரிவித்தோம். 

மற்ற 6 பேர் விடுதலை விவகாரத்திலும் விடுதலை செய்வதாக இருந்தால் விடுதலை செய்யட்டும். அப்படி செய்தால் கோவையில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? பேச வேண்டிய இடத்தில் பேசுவோம். எதிர்த்து பேச வேண்டிய இடத்தில் எதிர்ப்பை காட்டுவோம். கூட்டணி என்பதற்காக மக்கள் நலனை ஒரு போதும் கைவிடுவதில்லை. அதற்காக காலையில் எழுந்ததும் எதிர்த்து பேசுவது எப்படி என்று காரணம் தேடுவது உண்மையான தோழமை ஆகாது. எங்கள் கூட்டணி தி.மு.க.வோடு. அதே நேரம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த செயலை செய்தாலும் எதிர்த்து குரல் கொடுக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.