அதிமுக பொதுக்குழு 23ந் தேதி திட்டமிட்டபடி நடைபெறும்- துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி




அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்சியின் நலன் கருதி 23-ந்தேதி அன்று நடைபெற உள்ள செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தினை தள்ளி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் அதில் அவர் கூறியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஓபிஎஸ் அனுப்பிய கடிதம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார். திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு 23ந் தேதி நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளதாகவும், அதிமுக பொதுக் குழுவில் என்ன தீர்மானம் கொண்டு வருவது என்பது குறித்து ஆலோசனையின்போது ஓபிஎஸ் கலந்து கொண்டதாகவும், இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக பொதுக்குழுவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர் செல்வம் உறுதியாக வருவார் என்றும், பொதுக்குழுவில் பங்கேற்று தனது கருத்துக்களை அவர் எடுத்துரைப்பார் என்றும் முனுசாமி கூறினார். பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை தீர்மானம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது, பொதுக் குழுவில் எடுக்கும் முடிவுகளை ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இரு தலைவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.