தே.மு.தி.க.வை பலப்படுத்த
பிரேமலதா அதிரடி திட்டம்
சென்னை:
தே.மு.தி.க. 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்த போது பிரமாண்டமான வெற்றியை ருசித்தது. இதன்பிறகு அந்த கட்சி தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது. 2016-ம் ஆண்டு மக்கள் நல கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் முன்நிறுத்தப்பட்ட நிலையிலும் மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதன்பின்னர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் இணைந்து தே.மு.தி.மு.க. தேர்தலை எதிர்கொண்டது. இதைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் கூட்டணியை முறித்துக்கொண்டு தினகரன் கட்சியோடு தே.மு.தி.மு.க. கூட்டணி அமைத்தது. இந்த 2 தேர்தல்களிலும் தே.மு.தி.க. தோல்வியையே சந்தித்தது.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரது மனைவியான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவே கட்சியை வழி நடத்தி வருகிறார்.
தொடர் தோல்விகளால் தே.மு.தி.க. நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து விலகி விட்டனர்.
இதனால் தே.மு.தி.க. பழைய செல்வாக்குடன் இல்லை என்பதே உண்மையாகும். இதனை கருத்தில் கொண்டு தே.மு.தி.க.வை பலப்படுத்த பிரேமலதா பல்வேறு அதிரடி திட்டங்களை வைத்திருப்பதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது தற்போது ஒருநாள் முன்னதாகவே 2-ந்தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 78 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் தே.மு.தி.க.வின் எதிர்காலம் குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கூட்டம் முடிந்த பிறகு இது தொடர்பான அறிவிப்புகளை பிரேமலதா வெளியிட உள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியை மேலும் வலுவாக வழி நடத்திச் செல்வதற்கு ஏதுவாக பிரேமலதாவுக்கு செயல் தலைவர் பதவியை வழங்க மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்த உள்ளனர்.
தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்துவது குறித்தும், உள்கட்சி தேர்தலை நடத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
தே.மு.தி.மு.க. உள்கட்சி தேர்தல் கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு உள்கட்சி தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
கிளை, வார்டு, ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட அளவில் தே.மு.தி.க. நிர்வாகிகளை தேர்வு செய்ய விரைவில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க தே.மு.தி.க. திட்டமிட்டு உள்ளது.