ஓராண்டு காலத்தில் சொல்லாததையும்
செய்து இருக்கிறோம்
சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிக்கை வாசித்தார். அவர் பேசியதாவது:

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஐந்தாண்டு காலத்தில் நிறைவேற்றுவோம் என்பதுதான் வாக்குறுதி. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 60 முதல் 70 விழுக்காடு நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை அழுத்தம் திருத்தமாக நான் சொல்ல விரும்புகிறேன்.

இவை அனைத்தையும் பட்டியல் போடுவதற்கு காலநேரம் போதாது. ‘புதிதாக இவர்கள் எதையும் செய்யவில்லை, ஏற்கனவே இருந்ததைத்தான் பெயர் மாற்றி இருக்கிறீர்கள்’ என்று சிலர் விமர்சிக்கும்போது சிரிப்பாகத்தான் இருக்கிறது. இவர்கள் தெரிந்து பேசுகிறார்களா, தெரியாமல் பேசுகிறார்களா என்பது புரியவில்லை.

மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து வசதி என்பது ஏற்கனவே இருந்ததா? கொரோனா கால நிவாரணமாக 4,000 ரூபாய் தரப்பட்டதா? ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதா? பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதா? இலங்கைத் தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததா? பெரியார் பிறந்த நாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்டதா? அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்பட்டதா?

நெசவாளர்கள் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி ரத்து செய்யப்பட்டதா? தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கப்பட்டிருந்ததா? கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா? மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதா? மக்களைத் தேடி மருத்துவம் சென்றதா? இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டதா? நம்மைக் காக்கும் 48 திட்டம் இருந்ததா? தமிழ்வழியில் படித்தவர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை இருந்ததா? கல்லூரிகளை நோக்கி வரும் அரசுப் பள்ளி மாணவியர்க்கு 1,000 ரூபாய் தரப்பட்டதா? இப்படி என்னால் கேட்டுக்கொண்டே இருக்க முடியும்.

நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம்; சொல்லாததையும் இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம்.