மகிந்த ராஜபக்சேவை
கைது செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு




இலங்கையில் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார்.

இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

போராட்டக்காரர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர். இதனால் பெறும் வன்முறை ஏற்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “அமைதியாக நடந்த போராட்டத்தில் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, எம்.பி.க்களான ஜான்சன் பெர்னாண்டோ, சஞ்சீவா எதிர்மான்னே, சனத் நிஷாந்தா, மொரட்டுவா மாநகர சபை தலைவர் சமன்லால் பெர்னாண்டோ, மூத்த போலீஸ் அதிகாரிகள் தேசபந்து தென்னசோன், சந்தனா விக்ரமரத்னே ஆகியோரை போலீசார் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு வருகிற 17-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு திரிகோணமலை கடற்படை தளத்தில் தங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.