8 ஆண்டு நிறைவு - அனைத்து முதல் மந்திரிகளுடனும் வரும் 31-ம் தேதி
பிரதமர் மோடி உரையாடல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வரும் 30-ம் தேதியுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, இமாசல பிரதேசத்திற்குச் செல்கிறார். அவர் சிம்லாவில் உள்ள ரிட்ஜ் மைதானத்தில் இருந்து அனைத்து முதல் மந்திரிகளுடனும் காணொலி காட்சி வழியே உரையாட உள்ளார். இதற்காக இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் இன்று ரிட்ஜ் மைதானத்திற்கு நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
இந்நிலையில், இமாசல பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிரதமரின் 8 ஆண்டு கால ஆட்சி மிக நல்ல முறையில் நடந்துள்ளது. மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவை முன்னிட்டு மாநிலத்திற்கு பிரதமர் வருவது என்பது பெருமைக்குரிய விஷயம். இதற்காக இமாசல பிரதேச மக்கள் உற்சாகத்துடன் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைத்து முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாட இருக்கிறார். பா.ஜ.க.வின் அனைத்து மாவட்ட தலைமையகத்துடனும் அவர் தொடர்பு கொண்டு பேசுவார் என தெரிவித்துள்ளார்.