பிரதமர் மோடியை மாற்றும் சக்தி
காங்கிரஸ் கட்சிக்கா?
மு.க.ஸ்டாலினுக்கா?



டெல்லியில் அண்ணா கலைஞர் அரங்கம் திறப்புவிழா நிகழ்ச்சி ராகுல்காந்தி பங்கேற்காது குறித்தும், சோனியாகாந்தி பெயரளவிற்கு மட்டுமே பங்கேற்றார் என்பதும் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுவதுடன் டெல்லியில் உள்ள பாஜக கட்சி தலைவர்களையும், பிரதமர் உள்துறை அமைச்சர் உள்பட பல மத்திய அமைச்சர்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்கு பங்கேற்க வேண்டும் என்று அழைப்பிதழ் கொடுத்தும் வேண்டுகோள் விடுத்தது பாஜக கட்சியோடு நல்லுறவை திமுக நாடுகிறதோ அல்லது காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கு திமுக முயற்சி செய்கிறதோ? என்று பல கோணங்களில் டெல்லி வட்டாரத்தில் அரசியல் விமர்சனங்களும் எதிர்கட்சிகளின் விமர்சனமும் அதிகளவில் பேசப்படுகிறது.

அகில இந்திய அரசியலை ஸ்டாலின் முன்னெடுத்து செல்கிறார் என்றும் பாஜக கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய அணியை உருவாக்குவதற்கு திட்டமிடும் வழிகாட்டியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் பல்வேறு ஊடகங்களும் அரசியல் விமர்சகரும், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தியாளர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே டெல்லியில் தமது கட்சி அலுவலகத்தை திறந்து உள்ளது. முதன் முதலில் என்றும் பேசும் பொருளாக மாற்றுகிறார்கள். எந்த ஒரு அரசியல் கட்சி டெல்லியில் தனது ஒரு இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் கட்டிடம் கட்டி கொள்வதற்கு மத்திய அரசு இடம் வழங்கும் என்பதை பொதுமக்கள் மறந்திருக்கலாம். அரசியல்வாதிகள் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால் பத்திரிகையாளர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பார்கள் அதிமுகவும் இடம் ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல் வருகிறது. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு அகில இந்திய அரசிலை முன்னெடுப்பதில் திமுக முதலிடம் வகிக்கிறது என்பதை கடந்தகால நிகழ்வுகளையெல்லாம் சுட்டிக்காட்டி விவாதங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கிறது.

நீங்கள் பிரதமராக வருவீர்களா என்று முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியிடம் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது எனது ஆழம் எனக்கு தெரியும் என்று பதிலளித்தார். அப்போதைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்கள் அதே போல் நாடாளுமன்ற தேர்தலின் போது சென்னையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்தி என்று அவர் தான் வரவேண்டும் என்றும் கையை உயர்த்தி பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் அறிவித்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இதன்படி பார்த்தால் தந்தை (கருணாநிதி) பிரதமர் பதவி வேண்டாம் என்பது போலவும் மகன் மு.க.ஸ்டாலின் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது போலவும், ஊடங்களில் விவாதம் நடைபெறுவதும், இல்லாத ஒன்றை இருப்பதும் போல் உயர்த்தி காட்டுவது சமூக ஊடங்களில் பிரச்சாரமாக அமைந்திருப்பது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

இந்தியாவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி மிகவும் பலகீனமடைந்துள்ள நிலையில் பல மாநில கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் வலுவாக இருந்தாலும் அவற்றை வீழ்த்துக்கின்ற அளவிற்கு அகில இந்திய அளவில் பாஜக கட்சி மிக சக்தி வாய்ந்ததாக உருவெடுத்திருக்கிகறது என்பதை யாரும் மறந்துவிட கூடாது. பாஜகவுக்கு மாற்று சக்தியாக இன்னும் பத்து ஆண்டுகளுக்கு வேறு ஒரு சக்தி உருவாக முடியாத அளவிற்கு மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக கட்சி 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனது அரசியல் திட்டத்தை வகுத்து வருகிறது. ஆனால் அகில இந்திய அளவில் உள்ள எதிர்கட்சிகள் பாஜக கட்சிக்கு மாற்றாக ஒன்றிணைய வேண்டும் என்று பலமுறை முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் ஒன்றுப்பட்டு தேர்தல் களத்தில் நின்று வெற்றிப்பெற முடியவில்லை என்பதும் அத்தகைய முயற்சிகள் தோல்வியில் முடிந்து உள்ளதும் என்றும் கடந்த கால வரலாறு. தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று டெல்லியில் கட்சி அலுவலக விழாவில் பங்கேற்ற வடநாட்டு தலைவர்களும், தென்னாட்டு தலைவர்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு ஓரணியில் நின்று பாஜக கட்சியையும் பிரதமர் மோடி ஆட்சியையும் மாற்றி அமைப்பதற்கு ஒப்புக்கொண்டு தேர்தல் களத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நாடாளுமன்ற பொதுதேர்தலை சந்திப்பார்களா என்பது கேள்வி குறியாக இருந்தாலும் மாற்றத்திற்கு மக்கள் தயாராக இருந்தாலும் அவற்றை வாக்குகளாக மாற்றுகின்ற அளவிற்கு எதிர்கட்சிகளிடம் விட்டுக் கொடுக்கின்ற மனப்பான்மை என்பது சந்தேகமே-.

குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் விரும்புகின்ற இடங்களை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒதுக்கீடு செய்யுமா என்பதும் கேள்விகுறித் தான்.

- டெல்லிகுருஜி