திருமுல்லைவாயலில்
ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் மாசிலாமணீஸ்வரர் நிஜரூப தரிசனம்
நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் சந்தனக் காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்க உள்ளார்.
ஓணன் வாணன் என்னும் அசுரர்களிடம் போரில் தோல்வியுள்ள தொண்டைமான், தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது, யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன.
யானை முன்னேறி செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால், தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து ரத்தம் வருவதைக் கண்டான். யானையில் இருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கி பார்த்த போது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதை பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான்.
இறைவன் அவர்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம் பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன், அசுரர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றிக் கண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் அருளைப் போற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பினான். அவர்களை வென்று அவர்கள் கோட்டையில் இருந்து கொண்டு வந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களைத் தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான்.
அதுவே இந்த மாசிலாமணி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த வெள்ளெருக்குத் தூண்களை இன்றும் காணலாம்.
இத்தகைய சிறப்புடைய திருமுல்லைவாயல் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கு 362 நாட்கள் சந்தனக் காப்பிலேயே இருக்கும் மூலவருக்கு சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளுக்கு முந்தைய 2 நாட்கள் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு நிஜரூப தரிசனத்தில் காட்சி அளிப்பது வழக்கம்.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை பக்தர்களுக்கு நிஜரூப தரிசனத்தில் அருள்பாலிக்கிறார்.
சென்னை ஆவடி- அம்பத்தூர் இடையே திருமுல்லைவாயலில் அமைந்துள்ள தொன்மையான சிவத்தலம் ஸ்ரீகொடியிடை நாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் கோவில். சுமார் 1,400 ஆண்டுகளுக்கு முந்தைய பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலில் மூலவர் மாசிலாமணீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.
தீண்டாத்திருமேனியான இவரை தேவார நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், வள்ளலார், அருணகிரிநாதர் உள்ளிட்ட பல்வேறு அருளாளர்கள், மகான்கள் பாடிப்பரவி வழிபட்ட பெருமைக்குரிய திருத்தலம்.
இது தமிழக இந்து அறநிலையத்துறை நிர்வாகத்துக்குட்பட்டதாகும். இங்குள்ள கல்யாணதீர்த்த திருக்குளம் முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் சந்தனக் காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்க உள்ளார். இதையடுத்து 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சதய நட்சத்திர நாளில் மீண்டும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது. நிஜரூப தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசிக்க உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாசிலாமணீஸ்வரர் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபு (எ) பொன்னம்பலம், கோவில் செயல் அதிகாரி இளங்குமரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.