அதிர்ச்சி தரும் உச்சநீதிமன்ற தீர்ப்பு
10.5 சதவிகிதம் வன்னியர் உள்ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு!
உரிய தரவுகளை தர இயலாத தமிழக அரசு…! வன்னியர்களை ஏமாற்றும் தலைவர்
கடந்த 40 ஆண்டு காலமாக தமிழக அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கை வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு மாநிலத்தில் 20 சதவிகிதம், மத்திய அரசு பணிகளில் 2 சதவிகிதம் என்பதாகும். இந்த கோரிக்கை நிறைவேறுவதற்காக என்னற்ற போராட்டங்களை வன்னியர் சமுதாய மக்கள் முன்னெடுத்தார்கள். இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக 21 வன்னியர்கள் உயிர் தியாகம் செய்தார்கள். அதற்குப் பிறகும் இந்த இட ஒதுக்கீட்டிற்கு ஒரு நியாயம் கிடைக்காமலேயே கோரிக்கை நிறைவேறாமலேயே இருந்த நிலையில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி அவர் மறைவிற்குப் பின் ஆட்சிக்கு வந்த மறைந்த முதல்வர் மு.கருணாநிதி ஆட்சி இரண்டிலும் உரிய நியாயம் கிடைக்காமல் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டு இருந்த வன்னியர் சமுதாயம் 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு 108 சாதிகளை உள்ளடக்கி வன்னியர்கள் பெயரில் வன்னியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி 20 சதவிகிதம் இடஒதுக்கீட்டை வழங்கி அதற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று பெயரிட்டு வன்னியர்கள் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும், உயிர் தியாகத்திற்கும் ஒரு நியாயத்தை கற்பித்து வன்னியரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள். அந்த இடஒதுக்கீட்டை அப்போதே டாக்டர் ராமதாஸ் ஏற்றுக் கொள்ளாமல் அதை ஏற்க மறுத்தார். இருந்தாலும் சில அரசியல் காரணங்களுக்காக அப்போதைய அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்களாக இருந்த சிலரால் அந்த இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் பங்கேற்றவர்களை காக்கை வன்னியர்கள் என்று ஒரு சிலர் ஏளனம் செய்தார்கள். அதன் பிறகு அந்த இடஒதுக்கீடு படிப்படியாக வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அளவு கிடைக்காமலும் வன்னியர்கள் பெயரை சொல்லி அதில் இடம் பெற்றுள்ள பல சாதியினர்கள் 20 சதவிகித இடஒதுக்கீட்டை அனுபவித்தார்கள்.
ஆனால் இந்த இடஒதுக்கீட்டுக்கு எல்லாம் உரிய மக்கள் தொகை கணக்கெடுப்பதையும், தரவுகளையும், எந்த நீதிமன்றமும் கேட்டதில்லை. அதே நேரம் அருந்ததியர்களுக்கு முஸ்லீம்களுக்கு, கிறிஸ்துவர்களுக்கு இப்படி பல சாதிகளுக்கு இடஒதுக்கீடு உள்ஒதுக்கீடாக வழங்கிய போதும், அதற்கு எதிராக எந்த சாதியை சேர்ந்தவர்களும் நீதிமன்றத்தை நாடவில்லை. நீதிமன்றமும் எந்த தரவு அடிப்படையில் உள்ஒதுக்கீடை வழங்கினீர்கள் என்ற கேள்வி எழுப்பவில்லை. ஆனால் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் வழங்கலாம் என்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் ஜனார்த்தனன் அவர்கள் பரிந்துரையை -ஏற்று அதிமுக ஆட்சி இறுதிக்கட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றி, ஆளுநர் ஒப்புதலையும் பெற்று சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்திய பொழுது அதனை எதிர்த்து இது நாள் வரை வன்னியர்களை ஏமாற்றி தட்டிப்பறித்து அனுபவித்துக் கொண்டிருந்த சில சாதிகள் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் தனி உள்ஒதுக்கீடு வழங்க கூடாது என்று நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்.
அதனை ஆட்சியில் இருப்பவர்களும் ஆட்சியில் இருந்த பொழுது இடஒதுக்கீடு வழங்கிய பொழுது ஆதரித்து ஊக்கப்படுத்துகிறார்கள் என்பதை பார்க்கும் பொழுது வன்னியர்களின் அரசியல் செல்வாக்கு என்பது தமிழக அரசியலில் அவமானத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது என்பதை உணர முடிகிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் துரைசாமி அவர்கள் வழங்கிய தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தில் சென்று மேல்முறையீட்டு மூலம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. உச்சநீதிமன்றமும் சரியான தரவுகளை மாநில அரசு வழங்கவில்லை என்று கூறி போலி ஆதாரங்கள் இல்லாததினால் உயிர்நீதிமன்ற தீர்ப்பையே நாங்கள் உறுதி செய்கிறோம் என்று கூறி 10.5 சதவிகிதம் ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு மேல் எத்தகைய அணுகுமுறையை நாடினாலும் இந்த 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்கு வாய்ப்பு மிக மிக குறைவாகவே இருக்கிறது. இதற்கு அரசியல் இயக்கங்களும், ஆளுங்கட்சியும் சாதகமான நிலையை மேற்கொள்ளாது இறுதி தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் தான் கிடைக்கும் என்பதினால் மக்கள் மன்றத்திற்கு செல்வதே சிறந்த வழி.
இப்படி ஒரு தீர்ப்பு வந்துவிட்டதாக வாழப்பாடி ராமமூர்த்தியை போன்று உணர்ச்சி வசப்பட்டு வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் தங்கள் வகிக்கும் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வரமாட்டார்கள் என்பதை புரிந்துக் கொண்டு எதிர்கால திட்டமிடலை எவ்வாறு திட்டமிட்டு செயல்படுவது என்பதை இணைந்து ஆலோசிக்க வேண்டும். இதற்கு யார் முன் நிற்கப் போகிறார்கள் என்பது தான் கேள்வி.
- டெல்லிகுருஜி