பேசித் தீர்த்துக் கொள்ளலாம்:
மம்தாவுக்கு மேற்கு வங்காள ஆளுநர் கடிதம்
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் தன்கருக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், தன்கர் கடிதம் எழுதியுள்ளார்.


மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். அவருக்கும் ஜெக்தீப் தன்கருக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. உச்சக்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் சட்டசபை முடக்கி நடவடிக்கை மேற்கொண்டார்.

இது பா.ஜனதா அல்லாத மாநிலங்களையும் ஆளும் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் கவர்னர்களால் சட்டசபை கலைக்கப்படும் என்ற அச்சம் நிலவி வந்தது. இந்த நிலையில், பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என மம்தா பானர்ஜிக்கு தன்கர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ‘‘நிலுவையில் உள்ள பிரச்சினைகளை இந்த வார இறுதியில் பேசி தீர்ப்போம், முதல்வரின் நிலைப்பாட்டின் காரணமாக, தான் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்கவில்லை. பல்வேறு கவலை மிகுந்த அம்சங்கள் குறித்து அவசரமான ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இந்த வார இறுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் கலந்துரையாடல் மேற்கொள்ளலாம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.