ஊரடங்கு கட்டுப்பாடுகள்
மீண்டும் நீட்டிக்கப்படுகிறது?- மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை




தமிழகத்தில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகம் பேருக்கு பரவி வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பும் அதிகரித்துள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் நேற்று (ஞாயிறு) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வழிபாட்டுத்தலங்களும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை மூடப்பட்டிருந்தது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் முடிவுக்கு வருவதால் அடுத்த கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அப்படியே நீட்டிப்பதா? அல்லது அதிகரிப்பதா? என்பது பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் எடுத்துக் கூறினார்.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய் தொற்று பரவலை வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து ஓரளவு பலன் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்தும் கொரோனா பரவுவதும் ஒமைக்ரான் அதிகரிப்பதும் இன்னும் குறையவில்லை. எனவே பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றப்படுவதை ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதேபோல் ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

காணும் பொங்கல் தினத்தன்று சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெரு நகரங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பொழுதுபோக்கு இடங்களுக்கு சென்றுவருவது வழக்கம் என்பதால் அதற்கு எந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வருவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கை அமல்படுத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்கலாமா? மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பஸ் போக்குவரத்து சேவையை நிறுத்தலாமா? சுற்றுலா தலங்களில் பொதுமக்களின் வருகைக்கு தடை விதிப்பது, பார்வையாளர்கள் இன்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிப்பது, கடற்கரையில் பொது மக்களுக்கான கட்டுப்பாடுகளை நீட்டிப்பது போன்ற பல்வேறு விசயங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பரவுவது இன்னும் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது. என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது பற்றி அரசின் சார்பில் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்.