நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றியடைய வேண்டும்..! அதிமுகவினர்களுக்கு தலைவர்கள் ஆலோசனை!



நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல் தேதி எப்பொழுது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து அரசியல் கட்சியினர் மத்தியிலும் கேள்வியாக எழுந்துள்ள நிலையில் தேர்தல் நடைபெறுமா? நடைபெறதா என்ற ஒருவித தயக்கமும் இருந்து வருகிறது. நீதிமன்றத்தை அணுகி தேர்தலை நிறுத்துவதற்கும் அல்லது தள்ளிப்போடுவதற்கும் சில முயற்சிகள் எடுத்த நிலையில் உயர்நீதிமன்றம் அந்த வழக்கில் எந்தவித முடிவும் மேற்கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு கூறியதுடன் வடமாநிலங்களில் 5 மாநில தேர்தல் நடைமுறை வந்து விட்டதினால் நகர்புற உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவதில் மாநில அரசு தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் நகர்புற உள்ளாட்சிமன்ற தேர்தல் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரே கட்டமாக நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டுமென்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, அதன் தோழமை கட்சிகள் தேர்தல் ஆணையிடத்திடம் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் நகர்மன்ற தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் வேட்புமனுக்களை பெறுவதற்கு வழங்கலாம் என்று அறிவித்துள்ளது. எந்த நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு சென்றால் இந்த வழக்கின் தீர்ப்பு தேர்தல் நடத்துவதற்கான வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வழங்கலாம். ஆகவே தேர்தலை நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் திமுக அரசு தள்ளப்பட்டுள்ளது.

ஒருவேளை உள்ளாட்சிமன்ற தேர்தல் நடைபெற்றால் தேர்தல் முடிவு திமுகவிற்கு பாதகமாக அமைந்தாலும் அதை ஏற்றுக்கொண்டுத்தான் ஆக வேண்டும் என்ற மனநிலைக்கு ஆளுங்கட்சி வந்துள்ளது. காரணம் பொங்கல் பரிசு வழங்கியதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக எதிர்கட்சி தரப்பில் ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் எடுத்துவைக்கப்படும் நிலையில் இது குறிப்பாக பெண்களின் வாக்குகளில் திமுகவிற்கு எதிராக மாற்றுகின்ற நிலை உருவாகலாம் என்ற அச்சம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் பு00 சதவிகிதம் வெற்றியை கட்டாயம் பெற்றாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கி கடுமையாக உழைத்து நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மன்றப் பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக குறிவைத்து தேர்தல் பணியை தொடங்கிவிட்டது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நேர்க்காணல் நடத்தி கட்சியின் தலைமைக்கு அனுப்பிவைப்பதில் அதிமுக தலைவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் அதே நேரம் திமுக வேகம் காட்டுவதைப் போல் தெரியவில்லை. ஒருவேளை ரகசியமாக வேட்பாளர்கள் தேர்வை நடத்தி தயார் நிலையில் வைத்திருந்தாலும் இந்த தேர்தல் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குமா என்றால் அது எதிர்கட்சியை விட மிக குறைந்த அளவில் மட்டுமே வெற்றிப்பெற முடியும் என்பதை கள நிலவரங்கள் அமைந்துள்ளது. இந்த நகர்மன்ற தேர்தல் முடிவு 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னோட்டமாகவே அதிமுகவை பொறுத்தவரை பார்க்கப்படுவதால் அதிகளவில் வெற்றிப்பெற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் ஆர்வமுடன் இருப்பதால் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல் முடிவு அதிமுகவினர்களுக்கு அரசியலில் ஒரு மிகப் பெரிய நம்பிக்கையையும் திருப்புமுனையையும் ஏற்படுத்தக் கூடும்.

- டெல்லிகுருஜி