தியாகி கடலூர் அஞ்சலையம்மாள்
மறைக்கப்பட்ட அஞ்சலையம்மாளின் வரலாறு

ஆங்கிலேயர்களை எதிர்த்த தென்னகத்து ஜான்சிராணி என்று போற்றப்பட்ட வன்னியர்குல சத்திரிய வீர மங்கை. கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்பட்ட யுத்தமென்று சொன்னாலும் இந்திய சுதந்திர போராளிகளின் தியாகம் மகத்தானது. ரத்தம் சிந்திய போர்களை விடவும் உயர்வானது. இத்தகைய தியாகி தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் பிறந்த வீரமங்கை தியாகி அஞ்சலையம்மாள். இவரது வரலாறு சமகால அரசியல்வாதிகளால் பேசப்படுவதில்லை. ஆண்டு தோறும் நடைபெறும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற நிகழ்வுகளில் கூட இந்த தியாகி அஞ்சலையம்மாள் புகழ் எப்பொழுதோ ஒரு தடவை பேசப்படுகிறது. அப்படியென்ன இவருக்கு தனி சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். இதோ வருகிறது. எட்டு முறை சிறை தண்டனை பெற்றவர். பெல்லாரி. கன்னனூர் என வெகு தூரங்களில் சிறைச் சாலையில் சில காலம் நாட்டுக்காக வாழ்ந்தார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக சிறையில் இருந்து பரோலில் வந்து குழந்தை பெற்றெடுத்தவர். சென்னை எழும்பூரில் உள்ள வெள்ளைக்கார நீல்ஸ் சிலையை அப்புறப்படுத்துவதற்காக நடத்திய போராட்டத்தின் மூலம் தனது கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார். பல அதிர்ச்சிக் கலந்த ஆச்சரியங்களுக்கு சொந்தக்காரர் கடலூர் அஞ்சலையம்மாள் என்பது வரலாறு என்றாலும் அவரது வரலாறும் தியாகமும் தற்போதைய இளைஞர்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்றே கூறவேண்டும். இருந்தாலும் தற்போது அவரது மகள் வயிற்று பேரனாக திகழ்பவர் இன்றைய திமுக ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன். தியாகி அஞ்சலையம்மாள் திருமணம் ஆன காலம் தொடங்கி இறக்கும் வரை காங்கிரஸ்வாதியாக அப்பழுக்கற்ற தேசியவாதியாக தேசிய சிந்தனையுடன் வாழ்ந்தவர். 6 குழந்தைகளின் தாய். தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவதும் சிறைக்கு செல்வதுமாகவே வாழ்நாள் முழுவதும் இருந்து வந்துள்ளார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஏறத் தாழ 6 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தமிழகத்தில் இருந்து சிறை சென்ற சுதந்திர போராட்ட தியாகிகளில் ஆண்களுக்கு நிகரான பெண் போராளியாக விளங்கியவர். இவரது கடைசி மகன் காந்தியடிகள் அறிவித்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை கடலூரில் தாயார் நடத்திய பொ-ழுது அவரது கருவறையில் இருந்தவர். மகாகவி பாரதியார் கடலூரில் உள்ள அஞ்சலையம்மாள் வீட்டிற்கு மூன்று முறை வந்து தியாகி அஞ்சலையம்மாளுடன் உரையாற்றிவிட்டு சென்றது மற்றும் கதர் துணி விற்கவந்த தந்தை பெரியார் நேரில் வந்து பார்த்து பேசியது தேச தந்தை மகாத்மாகாந்தி அவர்களை கைவண்டியில் உட்காரவைத்து உபசரித்தது, மூதறிஞர் ராஜகோபாலச்சாரியார், பெருந்தலைவர் காமராஜர், ஓமந்தூரார் ராமசாமி செட்டியார் ஆகியோர் கடலூருக்கு வந்து தியாகி அஞ்சலையம்மாளுடன் பலமுறை ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இவரது மகனுக்கு சிறையில் இருந்து பரோலில் வந்து பிறந்ததினால் ஜெயில் வீரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் தியாகி அஞ்சலையம்மாள். பின்னாளில் அவர் ஜெயில் வீரனில் இருந்து ஜெயவீரன் என்று அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட தியாகி அஞ்சலையம்மாள் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் சரி அதற்குப் பிறகு திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆர் ஆட்சியாக இருந்தாலும் சரி, செல்வி ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி இவரது நினைவை போற்றி சிலை வைக்கவில்லை. சாலைக்கு கூட இவரது பெயர் வைத்து இவரது தியாகத்தை போற்றவில்லை. எந்த அரசியல் கட்சியும் இவரது பெயரை அரசு கட்டங்களுக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்ததில்லை. காரணம் இவர் ஒரு வன்னிய குல சத்திரிய பெண் என்பதால் இத்தகைய இழுத்தடிப்பு நடைபெற்றதாக இன்றைய இளைஞர்கள் கூறுகிறார்கள். தற்போதுள்ள திமுக அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதை கருத்தில் கொண்டு இவரது புகழை வருங்கால தலைமுறையினர் அறிந்துக் கொள்ளும் விதமாக இவருக்கு மகுடன் சூட்டுவாரா என்ற கேள்வியை கேட்கிறார்கள்.
- கடலூர் கண்ணன்