திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ஆட்டம்! 
கொடி கட்டிப் பறக்கிறது!!
உடன்பிறப்புகள் புலம்பல்!!


திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 6 மாதங்களை கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பதவியேற்ற முதல் நாளில் இருந்து பெறும் சவாலான சம்பவங்கள், நிகழ்வுகள், இயற்கை சீற்றம் என்று பல வழிகளிலும் இந்த ஆட்சிக்கு நெருக்கடிளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கொரனா நோய், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தமிழகம் முழுவதும் தண்ணீர் காடாகி மக்களின் அன்றாட வாழ்க்கை இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்றாடம் காலையில் இருந்து மாலை வரை பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருவதோடு அன்றாட அலுவல் பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார். குறிப்பாக மக்கள் நல்வாழ்வு துறை, இந்து அறநிலையத்துறை, வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, அமைச்சர்கள் தொடர்ந்து மக்களை சந்தித்து மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கி வருவதோடு சுழன்று, சுழன்று பணியாற்றுகிறார்கள். வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, போன்ற அமைச்சர்களும் கடும் மழையிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.


அதே போல் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பதவியேற்ற நாளில் இருந்து தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்கள் குறைகளை கேட்டுவருவதோடு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நிவாரணங்களை வழங்கி வருகிறார். சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி அவர்கள் அந்த தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு கொரனா நிவாரணம் வழங்கியது முதல் மழை வெள்ளம் பாதிப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கியது முதல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார். 


ஆனால் முதலமைச்சர் அதிகாரிகளும் மற்ற துறை செயலாளர்களும் ஒரே நேர்கோட்டில் இருந்துக் கொண்டு எல்லாப்பணிகளையும் தாங்கேள செய்வது போல் காட்டிக் கொண்டு நிர்வாகம் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு அமைச்சருக்கு எந்தப் பணியை வழங்கவேண்டும் என்றாலும் யோசித்து யோசித்து கோப்புகளை அனுப்புவதும் அமைச்சர் அனுப்புகின்ற கோப்புகளை பொறிப்போட்டு கேள்விகேட்டு திருப்பி அனுப்புவதிலும் கவனமாக இருந்து செயல்கிறார்கள். இத்தகைய நடவடிக்கைகளை முதலமைச்சரின் கவனத்தில் கொண்டு சேர்ப்பது கூட எந்த அமைச்சர்களும் பெரும்பாலும் முன்வருவதில்லை.


குறிப்பாக முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருக்கும் உதயச்சந்திரன் அவர்கள் அமைச்சர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருந்துக் கொண்டு நிர்வாகத்தை கவனித்து வருகிறார். அதே போல் துறை சார்ந்த செயலாளர்களும் துணை செயலாளர்களும் அமைச்சர்களை கலந்து ஆலோசிக்காமலேயே பல முடிவுகளை எடுப்பதும் அமைச்சர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுத்துவதிலும் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக டெண்டர் விடுவது முதல் பணியாளர் மாற்றம் செய்வது வரை அமைச்சர்களால் விரைந்து எடுக்க இயலாமல் தவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ள அதிகாரிகளே திமுக ஆட்சியின் நிர்வாகத்தில் அமர்ந்துக் கொண்டு ஒட்டுமொத்த நிர்வாக கட்டுப்பாட்டையும் கடந்த ஆட்சியில் நிர்வாகித்தைப் போல் இந்த ஆட்சியிலும் நிர்வாகித்து வருகிறார்கள் என்ற குற்றசாட்டும் எழுகிறது.

குறிப்பாக மின்சாரத்துறையில் இதுபோன்ற நிர்வாக தலையீடுகள் அதிகளவில் உள்ளது. மொத்தத்தில் முதலமைச்சரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவருக்கோ காவல்துறை அதிகாரிகளுக்கோ அமைச்சர்களோ சட்டமன்ற உறுப்பினர்களோ நேரடியாக எந்தவித சிபாரிசுக்கும் சலுகைக்கும் உடனடியாக அணுகுவதற்கு யோசித்து கொண்டிருக்கிறார்கள். மிக நெருக்கிய உறவினர்களுக்கு உதவி செய்வதற்கு சில அமைச்சர்களுக்கு இயங்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. 


டெண்டர் ஒப்பந்தம் வழங்குவது முதல் பணியிடை மாற்றங்கள் வரை கடந்த கால ஆட்சியில் உள்ளவர்கள் மட்டுமே இந்த ஆட்சியிலும் சலுகைகளைப் பெற்று உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதிகாரிகளின் கை உயர்ந்து இருப்பதினால் திமுக ஆட்சிக்கு வாக்களித்த தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் எந்தவித பயனும் கிடைப்பதற்கு எந்த வகையிலும் உதவிட முடியாமல் அதிகாரிகள் முட்டுக்கட்டைப் போடுவதாக சில அமைச்சர்களும் தோழமை கட்சிகளும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற தகவல்கள் உலவுத்துறை மூலமோ அமைச்சர்களின் சகாக்கள் மூலமோ முதல்வரின் கவனத்திற்கு சென்றால் மட்டுமே பிரச்சனைகளுக்கு விடிவுக்காலம் பிறக்கும்.


இந்த நிலையே தொடர்ந்தால் ஆட்சி மீது விரக்தியும், மகிழ்ச்சியின்மையும் தொடரும்...?


- டெல்லிகுருஜி