தமிழர்களின் வேலைவாய்ப்பை
தட்டிப் பறிக்கும் வட இந்தியர்கள்!  
குடியுரிமை பெற்று வாக்காளர்களாக வாழும் ஆபத்தான நிலை!!


தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரிகள் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அதே நேரம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு லட்சக்கணக்கானவர்கள் உள்ள அவல நிலையும் உள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வேலை வாய்ப்புகளில் அகில இந்திய அளவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தேர்வாகலாம் என்ற நிலை இருப்பதினால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் தட்டிப்பறித்து செல்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டு இளைஞர்கள் சமூக நீதியை காரணம் காட்டி அரசின் சலுகைகள் மூலம் இடஒதுக்கீட்டை பெற்று வேலைக்கு செல்லலாம் என்று காத்துக்கொண்டு கனவு கொண்டிருக்கிறார்கள். இதனால் சில குறிப்பிட்ட வேலைக்கு கூட தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் தேர்வு முறை கடைப்பிடிக்கப்படுவதால் மார்க் அடிப்படையில் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இத்தகைய வேலைகளையும் அண்டை மாநிலத்தவர்கள் இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, ஓட்டுநர் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, போன்றவற்றை போலியாகவும் பெற்று அரசு பணிகளில் சேர்ந்து விடுகிறார்கள். குறுக்கு வழியில் சிலர் வசதி வாய்ப்புகளை முன்னிலைப்படுத்தி அரசு வேலைகளையும் விலை கொடுத்து வாங்கி விடுகிறார்கள். கடந்த காலங்களில் இதுபோன்ற ஒரு நிலை இருப்பதை கண்டறிந்த அரசின் புலனாய்வு துறை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் இல்லங்களில் கூட சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சில உறுப்பினர்கள் சோதனை நடைபெறும் பொழுது வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பியோடிய கதையும் தமிழ்நாட்டில் நடைபெறுகின்றது. இத்தகைய நிலை தொடர்ந்து நீடிப்பதினால் தமிழ்நாடு மாநில அரசு பணியில் மட்டும் இல்லாமல் மத்திய அரசு பணிகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தகுதி அடிப்படையில் கூட வேலை பெற முடியாமல் தமிழ்மொழி அறியாதவர்கள் கூட வடநாட்டை சேர்ந்தவர்கள் தமிழில் அதிகம் மதிப்பெண் பெற்றதை போல் கணக்கு காட்டி மத்திய அரசின் தபால், தந்தி துறைகளில் அதிகளவில் வடநாட்டு இளைஞர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பை மத்திய அரசின் பணிகளிலும் தட்டிப்பறித்து விட்டார்கள். இத்தகைய முறைகேடுகளும் சில அரசியல் கட்சிகளால் வெளிச்சம் போட்டு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

1956ஆம் ஆண்டு நவம்பர் 1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பொழுதும் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கும் மட்டும் என்ற நிலையை எந்த அரசாங்கமும் கடந்த 70 ஆண்டுகளில் நடைமுறை படுத்தவில்லை. ஆனால் அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற சில மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி பேசும் அவர்களுக்கு 80க்கும் மேற்பட்ட வேலை சதவீதங்களை அந்தந்த மாநில மொழி பேசும் நபர்களுக்கு வழங்கி வருவதாக கூறப்பட்டாலும் தமிழ்நாட்டில் அதுபோன்ற ஒரு நிலை இன்று வரை ஏற்படவில்லை. இதனால் வடமாநிலங்களில் இருந்தும் பல பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வேலை தேடி வரும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி கடந்த பத்தாண்டுகளில் வடநாட்டு சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் குடியேறி பல்வேறு தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள், ரயில்வே நிர்வாகம், தபால்துறை, வருமானவரி துறை, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், டி.எச்.எல்., காவல்துறை போன்ற இடங்களில் தமிழ்மொழி பேச இயலாத பலர் தனியார் துறைகளிலும், அரசு துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் தட்டிப் பறிக்கின்ற ஒரு நிலை தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்மொழி பேசாதோர் பலர் குறிப்பாக லட்சக்கணக்கானோர் தமிழ்நாட்டில் குடியேறி ஓட்டுநர் உரிமம், ஆதார்கார்டு, ஒட்டுரிமை, சொந்த வீடு, சொந்த வாகனம், போன்றவற்றை தமிழ்நாட்டில் பெற்றுக் கொண்டு தமிழ்நாட்டு இளைஞர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு நியாயமாக கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்புகளை அநியாயமாக தட்டிப்பறித்து விடுகிறார்கள்.

மேலும் ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, ஒரே வாக்காளர் அட்டை என்ற நிலையை மத்திய அரசு நடைமுறை படுத்த விரும்புவதால் அரசியல் ரீதியாகவும், தமிழ்நாட்டு அரசியலில் மொத்தம் உள்ள சு04 சட்டமன்ற தொகுதிகளிலும் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தமிழ்மொழி பேசாத மாற்றுமொழி பேசும் வடநாட்டை சேர்ந்தவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் வருவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டு ஆட்சி அதிகாரத்திலும் அந்நிய மொழி பேசுபவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு வருகிறது. 

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்கின்ற தமிழ்நாட்டு பழமொழியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் இருப்பவர்களும் பயன்படுத்தி கொள்கிறார்கள். ஆனால் தமிழர்கள் தமிழ்நாட்டை வெளியே செல்வதற்கு அச்சப்பட்டுக் கொண்டு கிடைக்கின்ற வேலைவாய்ப்புகளையும் பெறுவதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்கு காத்திருப்பதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டு இளைஞர்கள் வேலை வேண்டும் என்ற ஆசையை துறந்து வேலையற்றவர்களாகவே வாழவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள். மாநில அரசின் வேலைவாய்ப்பும் மத்திய அரசின் தனியார்மயமாக்க கொள்கை மூலம் தகர்த்தெறியப்பட்டு அரசு பணி என்பதே முற்றிலும் பெறமுடியாத நிலையும் உருவாகலாம். நாடு விடுதலைக்கு பின்பும், முன்பும் இருந்த நிலையில் எண்ணற்ற மாற்றங்கள் தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் மாநில அரசின் வருவாய்யின் பெரும்பங்கை மத்திய அரசு தனது வருவாய் ஆக எடுத்துக் கொள்கிறது. மாநில அரசோ, மத்திய அரசின் கையேந்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக மத்திய அரசின் பார்வையும் இந்திய தனியார் முதலாளிகளின் ஆதிக்கமும் தமிழ்நாட்டை குறிவைத்தே அமைவதால் தமிழர்களுக்கு எந்தவித பயனும் கிடைக்காமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மாநில அரசோ தனது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரங்களையெல்லாம் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் பொழுது அதை தடுத்து நிறுத்துகின்ற அளவிற்கு அரசியல் பலம் வாய்ந்த இயக்கங்கள் தமிழ்நாட்டின் பலகீனமாக இருப்பதால் பதவிகளுக்காக எதையும் சமரசம் செய்து கொள்ளும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளும் தட்டி கேட்பதை விட்டுக் கொடுத்து சில நேரம் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இது கடந்த கால அதிமுக ஆட்சியில் அதிகளவில் மாநில உரிமைகளை மத்திய அரசு நேரடியாக தலையிட்டு எடுத்துக் கொள்வதை மாநில அரசால் தடுக்கமுடியவில்லை. 

உதாரணத்திற்கு தேசிய கல்வி கொள்கையை குறிப்பிடலாம். நதி நீர் பிரச்சனையும் குறிப்பிடலாம். வேலை வாய்ப்புகளை வடமாநிலத்தவர்கள் தட்டிப்பறிக்கும் விஷயங்களையும் குறிப்பிடலாம். வரி வசூல் செய்வதிலும், ஒரே ரேசன் கார்டு என்ற முறையிலும், மத்திய தனது ஆதிக்கத்தை செலுத்தும் பொழுது கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பதவியை தக்கவைத்து கொள்வதற்காக மத்திய அரசை எதிர்த்து பேசுவதை முற்றிலும் நிறுத்திக்கொண்டு நியாயமான தமிழ்நாட்டின் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார் என்றே கூறலாம்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி சீமான் போன்ற சிறு சிறு இயக்கங்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து போராடினாலும் ஆட்சிமாற்றம் ஏற்பட்டப் பிறகும் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தீர்மானத்தை கொண்டு வந்து இன்று வரை நிறைவேற்றாமலேயே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. 

ராஜஸ்தான், குஜராத், மும்பாய், பீகார், மேற்குவங்காளம், ஒடிசா, அஸ்சாம், நாகலாந்து, உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வேலைதேடி வந்தவர்கள் இன்று தமிழர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழ்நாட்டின் எல்லாதுறைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டு நிலங்களையும் விலைக் கொடுத்து வாங்கிக் கொண்டு எஜமானர்களைப் போல் வாழும் நிலை உருவாகியுள்ளது. நிலம் வீடு வாங்குவது வடநாட்டை சேர்ந்தவர்களாகவும், விற்பவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாகவும் இருந்து வருவதினால் இந்த நிலை தொடர்ந்தால் அல்லது தடுத்து நிறுத்த மறுத்தால் தமிழ்நாட்டில் தமிழ்மொழி பேசுபவர்கள் சிறுபான்மையானவர்களாகவும், மாற்றுமொழி பேசுபவர்கள் பெரும்பான்மையானவர்களாகவும் காலப்போக்கில் மாற்றம் உருவாகிவரும்.

தமிழ்நாடு என்ற பெயர் மட்டும் தான் நாம் சொல்லிக்கொண்டிருப்போம். அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டு வடநாட்டவர்கள் முதலாளிகளாகவும், தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ்மொழி பேசுபவர்கள் கூலிகளாகவும் ஏற்படும் அபாயம் ஏற்படும். இதை புரிந்துக் கொண்டு மாநில அரசும் தமிழர்களும் விழித்துக் கொள்ளவேண்டும். இல்லையேல் பிழைக்க வழியின்றி மாற்று மொழி தெரியாமல், தமிழர்கள் வாழவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

- டெல்லிகுருஜி